உத்ரகாண்டில் மாஸ் காட்டிய பாஜக

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகிக்கின்றனர்.

அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

கடந்த 2000ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 27 வது மாநிலமாக உத்தரகாண்ட் உதயமானது. உத்திரபிரதேசமும் இமாச்சலப் பிரதேசமும் இதன் எல்லைகளாக இருக்கிறது.

இயற்கை வளங்களோடு பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி யமுனோத்ரி உள்ளிட்ட பல்வேறு புனித தலங்கள் இருக்கும் இந்த மாநிலம் கடவுளின் பூமி என கூறப்படுகிறது.

இந்த மாநிலத்தில் அல்மோரா, பாரி – கர்வாள், நைனிடால் – உதம்சிங் நகர், ஹரித்துவார், தேரிகார்வாள், ஆகிய ஐந்து மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து தேசிய கட்சிகளே அதனை ஆண்டு வந்திருக்கிறத. தற்போது ஆளும் கட்சியாக பாஜகவும், முதல்வராக புஸ்கர் சிங் தாமியும் உள்ளனர்.

பகுஜன் சமாஜ் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற தேசிய கட்சிகள் இருந்தாலும் மக்களிடம் செல்வாக்கு இல்லாததால் அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த மாநிலம் உருவானதலிருந்தே நான்கு மக்களவைத் தேர்தல்களை மூன்றில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக 100 சதவீத வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்டில் ஏழாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் முப்பதாம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலில் அல்மோரா தொகுதியில் பாஜகவின் அஜய் தண்டாவும் காங்கிரசின் பிரதீப் தண்டாவும் நேரடியாக மோதினர். கார்வால் தொகுதியில் அணில் பலூனி, காங்கிரசின் கணேஷ் கோடியாலும், மிகவும் பிரபலமான ஹரித்துவார் தொகுதியில் பாஜகவின் திருவேந்திர சிங் ராவத், காங்கிரசின் வீரேந்திர ராவத், நைனிடால் உதம்சிங் நகர் தொகுதியில் பாஜகவில் அஜய் பட், காங்கிரஸின் பிரகாஷ் ஜோசி, தேரி கார்வாள் தொகுதியில் பாஜகவின் மாலா ராஜலக்ஷ்மி ஷா காங்கிரசின் ஜோட் சிங் கன்சோலா ஆகியோ களம் இறங்கினர்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது  பாஜக வேட்பாளர்கள் அனைவருமே முன்னிலையில் இருக்கின்றனர். குறிப்பாக தேரிகார்வால் தொகுதியில் போட்டியிடும் மாலா ராஜலக்ஷ்மி ஷா, ஜாட் சிங் கன்சோலாவை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதேபோல அனைத்து பாஜக வேட்பாளர்களுமே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response