சித்தார்த் மற்றும் திவ்யான்ஷா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டக்கர்’. இத்திரைப்படத்தை கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் இதற்க்கு முன்பு ‘கப்பல்’ என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்காது. இப்படத்தில் சித்தார்த் மற்றும் திவ்யான்ஷாவுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அருண் வைத்தியநாதன், விஸ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் இம்மாதம் 26 ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இப்படம் பற்றி இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் கூறியதாவது, “படத்தின் நாயகனான சித்தார்த் ஒரு எழுமையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்படிப்பட்ட கதாநாயகன் எதிர்பாராத விதமாக படத்தின் நாயகியான ஒரு கார் தொழிற்சாலை உரிமையாளரின் மகள் திவ்யான்ஷாவை சந்திக்கிறார். அவர்களுடைய சந்திப்பு ஒரு சாலை பயணத்தில் கொண்டு செல்கிறது. சித்தார்த் மற்றும் திவ்யான்ஷாவின் பயணத்தில் அவர்கள் இருவருக்குள் ஒரு நட்பு ஏற்படுகிறது. காதலாக மாறும் அவர்களுடைய நட்பு, தொடர்கிறதா இல்லையா? சித்தார்த் மற்றும் திவ்யான்ஷா சந்திக்கக்கூடியா பிரச்சனைகள் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.
இப்படத்தில் யோகி பாபு ஒரு பிரபல தாதாவின் மகன் கதாபாதிரத்தில் நடிக்கிறார். சுட்டுப்போட்டாலும் தாதாவாக மாற இயலாத யோகி பாபுவை அவருடைய தந்தையார் யோகி பாபுவை தாதாவாக மாற்ற முயற்சித்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் வில்லன் கதாபாதிரத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படமாக இருக்கும் என்றார் இயக்குநர்.
படத்தின் டிரைலரில் சில காட்சிகளை பார்க்கும் போது கலாச்சாரத்தை மீறியது போல் இருக்கிறதே, இது அடல்டு படமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், “பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை வைத்து தான் திரைக்கதை அமைக்கிறோம். அதுபோல தான் நாயகியின் கதாபாத்திரத்தை ரொம்ப போல்டானவராக வைத்திருக்கிறேன். அதேபோல், கிராமத்தில் இருந்து நாயகன் வருகிறார். இருவருக்கும் முரண்பாடான கருத்து வருகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சிட்டியில் சாதாரணமாக இருந்தாலும், கிராமத்தில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தான் இது. இப்படி ஒரு பொண்ணு, அப்படி ஒரு பையன், இவர்களுக்கு இடையே காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் திரைக்கதை. டிரைலரில் அந்த ஒரு காட்சி இருக்கிறது. ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே அப்படி இருக்காது. அதனால், இது அடல்டு படம் அல்ல, அனைவரும் பார்க்க கூடிய படம் தான். தணிக்கை அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் வழங்கியிருக்கிறார்கள். அதனால், நிச்சயம் இது அடல்டுக்கான படம் இல்லை. குடும்பத்துடன் பார்த்தால் கூட சிரித்துவிட்டு தான் வருவீர்கள்.” என்றார்.
சித்தார்த்தின் கதாபாத்திரம் பற்றி கூறிய இயக்குநர், “கோபமான இளைஞர் வேடத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். அவரை சுற்றி தவறாக எந்த விஷயம் நடந்தாலும் அதை பார்த்து சட்டென்று கோபமடைந்துவிடுவார். நிஜத்திலும் அவர் அப்படி தான். சமூகத்தில் எதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுப்பார், இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார். அவரை கிராமத்து இளைஞராக, அதுவும் ஏழை வீட்டு இளைஞராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், படத்தை பார்த்தால் அவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்வீர்கள், அதற்கான சில காட்சிகளை வைத்திருக்கிறேன். அடுத்து ஒரு படமும் அவரை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.
மேலும், படம் பற்றி கூறிய இயக்குநர், “காதல் மற்றும் பயணம் தொடர்பாக சில படங்கள் வந்திருந்தாலும், இந்த படத்தில் வெறும் காதல் மற்றும் பயணத்தை மட்டுமே மையப்படுத்தாமல், தத்துவமான விஷயங்கள் நிறைய பேசியிருக்கிறோம். டிரைலரில் கூட ஒரு வசனம் வரும், “பணம் இருந்தால் நிம்மதி போயிடும்” என்று ஹீரோயின் ஹீரோ கிட்ட சொல்வாங்க, ஆனால் ஹீரோ, இதெல்லாம் பணம் இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட சொல்றது, என்று சொல்வார். இப்படி படம் முழுவதுமே நிறைய விஷயங்களை பேசியிருக்கிறோம்.
’டக்கர்’ என்பது இந்தி வார்த்தை, மோதல் என்பது தான் அதன் அர்த்தம். டிரைலரில் இருக்கும் காட்சிகள் சில கேள்விகளை எழுப்பினாலும், படத்தில் தத்துவ ரீதியான விஷயங்கள் பேயிருந்தாலும், முழுமையான பொழுது போக்கு படமாக ‘டக்கர்’ இருக்கும்.” என்றார்.
இப்படம் பற்றி இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா கூறியதாவது, “இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதை சொல்லும் போதே இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று தான் சொன்னார். படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இப்படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்காது. அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனக்கு இந்த படம் ஒரு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த படம் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படமாகவும் இருந்தது. எல்ல இசையமைப்பாளர்களுக்கும் ஒரு நல்ல இயக்குநர் கிடைக்கும் போது தான், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். அந்த வகையில், ‘டக்கர்’ படம் எனக்கு ஒரு கிப்ட் என்று தான் சொல்வேன், என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது.” என்றார்.
‘டக்கர்’ படத்திரக்கு ஸ்ரீனிவாஸ் கவிநயம் கதை எழுதியுள்ளார். உதயகுமார்.கே கலை பணியை கவனிக்க, தினேஷ் காசி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சதிஷ் மற்றும் ஸ்ரீதர் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேஷன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ஏ.கெளதம் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
மே 26, 2023 அன்று உலகெங்கும் ரிலீசாகும் ‘டக்கர்’ திரைப்படத்தை கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்க, ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரித்துள்ளனர்.