அன்னக்கொடி – விமர்சனம்!

annakodi oc

கருத்தம்மா, கிழக்கு சீமையிலே போன்ற கிராமத்து கதைகளை மண்வாசனையோடு சொன்ன பாரதிராஜா, இந்த முறை சொல்லியிருக்கும் கதை அன்னக்கொடியும் கொடிவீரனும்.

செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் லக்ஷ்மனுக்கும், சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் கார்த்திகாவுக்கும் ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல். சில சந்திப்புகளிலேயே காதல் மேலும் வளர்கிறது. இந்த நிலையில் மனோஜை கார்த்திகா அசிங்கப்படுத்திவிட, அவளை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான் மனோஜ். இதற்காகவே போலீஸ் துணையோடு லக்ஷ்மனை சிறைக்கு அனுப்பி, கார்த்திகாவின் தாய் இறந்தபின் அவளை திருமணம் செய்து வீட்டுக்கு கூட்டிசெல்கிறான். அன்னக்கொடி மற்றும் கொடிவீரனின் காதல் என்ன ஆனது, அந்த திருமணம் என்ன ஆனது? அவள் மீண்டும் லக்ஷ்மனையே கரம் பிடித்தாளா? எனபது க்ளைமாக்ஸ்.

ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன. ஒரு காட்சி கூட ரசிக்கும் விதத்தில் இல்லை. மாறாக நிறைய காட்சிகள் குமட்டலை தருகின்றன. சில காட்சிகளை, இது பாரதிராஜா படம் தானா? என்ற சந்தேகம் கூட எழுகிறது. நாயகனின் விரல் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சி, மனோஜின் தந்தை மருமகளை காமத்தோடு பார்க்கும் காட்சி போன்றவை சில உதாரணங்கள்.

படத்தில் ஹீரோ லக்ஷ்மன். முதல் படம். நாயகியுடன் ரொமான்ஸ் செய்வதும், அழுவதும் தான் இவர் செய்யும் வேலைகள். நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அன்னகொடியாக கார்த்திகா. கோ படத்தில் நகரத்து பெண்ணாக வந்த இவரை அன்னகொடியாக உருவகப்படுத்த சற்று சிரமமாக தான் உள்ளது. இருந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

படத்தில் சடையனாக வரும் மனோஜ் தான் முழு படத்தையும் ஆக்கிரமித்துள்ளார். அவர் செய்யும் காமெடி கலந்த வில்லத்தனம் நன்றாக உள்ளது. அவரின் கதாபாத்திரம் சரியாக செதுக்கப்படவில்லை என்றாலும் அவர்தான் படத்தில் ஆறுதல். இவருக்கு நிறைய இடங்களில் கிளாப்ஸ்.

சடையனின் தந்தையாக வரும் இயக்குனர் மனோஜ்குமார், அன்னகொடியின் தாய் , மீனாள், கொடிவீரன் தந்தை, போலீஸ்காரர், ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர்.

பெரும்பாலும் பாரதிராஜா படங்களில் கிராமிய இசை தான் பிரதான அம்சம். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் சரி, சபேஷ் முரளியின் பின்னணி இசையும் சரி ரசிகர்களை கவர தவறி விட்டது.

படம் எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்பதை இயக்குனர் தெளிவாக சொல்லவில்லை. மேலும் காட்சிகள் ஆமை வேகத்தில் நகர்வது ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. படத்தில் நிறைய காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம். நீளத்தை குறைத்திருக்கலாம். இந்த அன்னகொடியால் பாரதிராஜாவின் முந்தைய படங்களை கொஞ்சம் கூட ஈடுகட்ட முடியவில்லை.