நடிகர் சம்பத்ராமுக்கு கலாபவன் மணி நினைவு விருது

“கலாபவன் மணி நினைவு விருது” கேரளாவில் கலாபவன் மணி அவர்கள் இருக்கும்போதே அவராலேயே துவங்கப்பட்ட “கலாபவன் மணி சேவன சமிதி” என்ற தொண்டு நிறுவனம் சார்பாக திரு. இஸ்மாயில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு முதல் மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க துவங்கியது…

அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமா கலைஞர்களுக்கும் விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வெளியான “காஞ்சனா 3” படத்திற்காக நடிகர் திரு.சம்பத்ராம் அவர்களுக்கு “சிறந்த துணை நடிகர்-2019” க்கான “கலாபவன் மணி நினைவு விருது” வழங்கப்பட்டது. “காஞ்சனா 3” படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது 2020 ஆம் ஆண்டே கேரளாவில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கொரானா முடக்கம் காரணமாக சிறிது தாமதமாக கலாபவன் மணி அவர்களின் பிறந்த நாளான 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி எளிய முறையில் கேரளாவில் நடந்தது. அப்போது நடிகர் சம்பத்ராம் அவர்கள் நேரில் சென்று விருதை பெறமுடியவில்லை. அதனால் இஸ்மாயில் மற்றும் குழுவினர் நேரடியாக சென்னை வந்து சிறிய முறையில் “வல்லரசு” புகழ் இயக்குனர் திரு. N.மகராஜன் அவர்களின் தலைமையில் விழாவை நடத்தி நடிகர் சம்பத்ராமுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் “கட்டில்” திரைப்பட இயக்குனர் திரு. E.V.கணேஷ் பாபு மற்றும் சிலர் கலந்துகொண்டனர். இது பற்றி நடிகர் சம்பத்ராம் கூறியதாவது:

“இவ்விருதை எனக்கு நேரில் வழங்க கேரளாவில் இருந்து எனக்காக சென்னை வந்த திரு. இஸ்மாயில் அவர்களுக்கும், தன் திருக்கரங்களால் எனக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்த என் திரையுலக குருநாதர் “வல்லரசு” திரைப்பட புகழ் இயக்குனர் திரு.N.மகாராஜன் அவர்களுக்கும், “காஞ்சனா 3″ திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர்/நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்….
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர்/இயக்குனர் திரு. பிரிதிவிராஜ், நடிகர் /இயக்குனர் திரு. லால், மூத்த இயக்குனர் திரு. ஜோஷி, நடிகர் திரு.நரேன் மற்றும் பலர் வாங்கி இருக்கும் இந்த விருதை நானும் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்..”
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response