பாரம்பரிய நெல் ரகங்கள் காலத்தின் கட்டாயம் கூறுகிறார் இயற்கை விவசாயி

எதிர்கால சந்ததியின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் இயற்கை விவசாயிகள்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து வயல்வெளி பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

‘பாரம்பரிய நெல் ரகங்கள் காலத்தின் கட்டாயம்’ என்ற தலைப்பில் முன்னோடி இயற்கை விவசாயி கரிகாலன் பேசும்போது,
“நோயில்லாத தலைமுறையை உருவாக்க வேண்டுமென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். நாம் விளைவிக்கக்கூடிய நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும். நம்மாழ்வாரின் வழியில் விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர் ஆகவும் மாற வேண்டும்” என்றார்.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் பேசுகையில்.

“தமிழகத்தில் 80 சதவீதத்திற்கு மேல் அரிசியே பிரதான உணவாக உட்கொண்டு வரும் இந்த நிலையிலும்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயர்ந்ததாக எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. அதற்கு காரணம் நாம் உற்பத்தி செய்யும் பொருளை நாமே நேரடியாக மதிப்பு கூட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முன் வராததும் ஒரு காரணம். இனிவரும் காலங்களில் சமூக மாற்றத்திற்கு ஏற்ப நாமும் சந்தைப்படுத்தலில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழகஅரசு செய்து தர முன்வரவேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே தாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது என்பதாலும், எதிர்கால சந்ததியின் உடல்நலனை கருத்தில் கொண்டும், விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்ட நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்” என்று பேசினார்.

கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

Leave a Response