தீபாவளி ரிலீசுக்கு ’மரிஜுவானா’ ரெடி! யார் தடுத்தாலும், தடைகளை தகர்த்தெறிவோம்!! – படக்குழுவினர் அதிரடி பேட்டி

சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இந்தியாவை தாக்கிய கொரோனா எனும் கொடிய தொற்று நோய், இன்னும் நம் நாட்டை ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் உள்ள அனைத்து தொழில்களும் சென்ற இரண்டு மாதங்கள் முன்வரை முடங்கி இருந்தது. ஆனால் சினிமா துரை மட்டும் இன்னும் முடங்கியே உள்ளது.

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்திருக்கும் நிலையில், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல்களை தீர்க்க திரையுலக சங்கங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு தடையாக இருந்தாலும் சரி, யார் தடுத்தாலும் சரி ‘மரிஜுவானா’ படத்தை தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்வோம், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘Third Eye Creations’ சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில், ‘அட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பாராட்டு பெற்ற ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆஷா பார்த்தலோம் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘மரிஜுவானா’ என்பது கஞ்சாவின் அறிவியல் பெயர். மருத்துவத் துறையில் புற்றுநோய்க்கான மருந்தாக சில நாடுகளில் கஞ்சா அங்கீகரிக்கப்பட்டாலும், போதைக்காக அவற்றில் சேர்க்கப்படும் சில தீங்கான பொருட்களாலும், அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் பெரும் போதைப்பொருளாக உருவாகியிருக்கிறது. இப்படி ஒரு கஞ்சா கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றங்களை மையாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் எம்.டி.ஆனந்த்.

படம் குறித்து இயக்குநர் எம்.டி.ஆனந்த் கூறுகையில், “கஞ்சா என்பது சில நாடுகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால் புற்றுநோயையும் குணப்படுத்தும் சக்தி கஞ்சாவுக்கு உண்டு என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான போதைக்காக கஞ்சாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான போதைக்கு ஆளாகும் மனிதன் தன்னையும் மறப்பதோடு, தனது மனநிலை பாதிக்கப்பட்டு பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறான். அப்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், பெண் குழந்தைகளும் தான். இப்படி ஒரு போதை கலாச்சாரம் உருவாக என்ன காரணம் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கிறோம்.

இளைஞர்களுக்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், பெற்றோர்களுக்கான ஒரு பாடமாகவும், சமூகத்திற்கு நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும். நாட்டில் குற்றம் நடந்தால், அந்த குற்றத்தை செய்பவர்கள் பெரிய ஆட்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், அதே சமயம் குற்றம் செய்பவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், என்பது பற்றியும் படத்தில் பேசியிருக்கிறோம். மொத்தத்தில், போதை மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றவாளிகளில் கூட ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பது, என்ற இரண்டு விஷயத்தையும் சாட்டையடியாக சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தமிழ் தாய் கலைக்கூடம் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “ஒரு நல்ல படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலிஸூக்கு தயாரான போது தான் கொரோனா பிரச்சினை வந்தது. தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுவதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க, புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை மதிக்கிறோம். அதே சமயம், மீண்டும் படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் சூழலில் நாங்கள் இல்லை. கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து படம் தயாரித்திருப்பதோடு, விளம்பரத்திற்காகவும் பெரும் தொகையை செலவு செய்துவிட்டு படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டும். இனியும் நாங்கள் காத்திருக்க போவதில்லை. அதனால், படத்தை நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

ஹீரோ ரிஷி ரித்விக் பேசுகையில், “’அட்டு’ படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். அதற்காக எனக்கு ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து தற்போது வரை பாராட்டு கிடைத்து வருகிறது. மக்கள் மனதில் நிற்கும் அப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த போது தான் ‘மரிஜுவானா’ கதை என்னிடம் வந்தது. கதை மற்றும் கதாப்பாத்திரம் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருந்தது. இதில் நான் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கட்டுப்பாடுகளை மதிக்காத ஒரு அதிரடி போலீஸ். சைக்கோ போலீஸ் என்று கூட சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் ஒரு சைக்கோ.

ரெகுலரான போலீஸ் வேடம் என்றால் ஒகே. ஆனால், இந்த போலீஸ் வேடம் சற்று வித்தியாசம் என்பதால், இந்த கதாப்பாத்திரத்திற்காக சில மாதங்கள் பயிற்சி எடுத்தேன். எனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் சிலரிடம் பயணித்து, போலீஸ் எப்படி இருப்பார்கள், என்பதை தெரிந்துக் கொண்டதோடு இயக்குநர் ஆனந்தின் போலீஸ் கதாப்பாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு நடித்தேன். ’அட்டு’ மூலம் எனக்கு எப்படி பாராட்டுகள் கிடைத்ததோடு அதை விட பல மடங்கு அதிகமாக ‘மரிஜூவானா’ போலீஸ் வேடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார் ரிஷி ரித்விக்.

Leave a Response