நெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவுத்தினம் உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் பேசுகையில், “பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் உயிர் வாழ உணவு என்பது அவசியம். ஆனால், மனிதனுக்கு மட்டுமே உணவுதேவை என்பதைமட்டுமே பேசி வருகிறோம். உணவு என்பது உற்பத்தி முதல் சமையலறை வரை பல்வேறு சவால்களை சந்திக்கிறது. தற்போது உணவில்லாமல் பல லட்சம் பேர் படுக்கைக்கு செல்வதாக புள்ளி விபரம் கூறுகிறது. திருமணங்கள் உடபட பல்வேறு நிகழ்ச்சிகளில் நூற்றுகணக்கானோர் உண்ணக்கூடிய உணவுப்பொருட்கள் குப்பையில் கொட்டப்படுகிறது. இதை தவிர்த்து உணவில்லாதவர்களுக்கு வழங்க வேண்டும். நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய முன் வரவேண்டும். நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து உயிர்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும்” என்று பேசினார்.

பின்னர் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வோம் என்றும், உணவுகளை வீணடிக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியி்ல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Response