பெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு! விரைவில் OTT தளத்தில்

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்ததோடு, இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் “பச்சை விளக்கு”.

டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதோடு பத்திரிக்கையாளர்களிடமும் வெகுவாக பாராட்டு பெற்றது. “மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்” என்று பல பத்திரிக்கைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

பூடான் நாட்டில் உள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ‘ட்ரக்’ என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற ‘ட்ரிப்விள்’ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது. அதேபோல், நியூயார்க், லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வ தேர்வாக இப்படம் கலந்துக் கொண்டுள்ளது.

“பச்சை விளக்கு” திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரத்தை தொடர்ந்து, ஒடிடி நிறுவனங்கள் அப்படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்துள்ளது. முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களின் படங்களை மட்டுமே ஒடிடி நிறுவனங்கள் வெளியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில், அறிமுக இயக்குநர் மற்றும் நடிகரின் படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது “பச்சை விளக்கு” படத்திற்கு கிடைத்த மற்றொரு கெளரவம் ஆகும். காரணம், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அப்படி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாடகக் காதல் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த பிரச்சினை போல, நமக்கு தெரியாத பல நாடகக் காதல் பிரச்சினைகள் இங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த நாடகக் காதலில் இருந்து பெண்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது, என்பதை விவரித்திருக்கும் இப்படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஊடங்கள் பாராட்டிய “பச்சை விளக்கு” படம் தற்போது உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது வென்றிருப்பது படத்திற்கும், படக்குழுவினருக்கும் உற்சாகத்தை கொடுத்திருப்பதோடு, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என இயக்குநர் டாக்டர் மாறன் தெரிவித்தார்.

Leave a Response