இணையதளம் வாயிலாக 31 பெண்கள் இணைந்து நடத்திய ஓண நடனம்

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம். இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங்குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது. ஆகவே, ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓண நடனம், புலிக்களி எனும் புலி விளையாட்டு, படகு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் பண்டிகை களைகட்டும்.

ஆனால் கொரோணா காலத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால் கொண்டாட்டங்களுக்கு அது தடையாக உள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியையையும், நடன ஆசிரியையுமான அம்பிகா பாலசுப்ரமணியமும், அவரது மகள் கத்தரில் வசிக்கும் அமிர்தாவும் சேர்ந்து தங்களது நூபுரா நடன பள்ளி சார்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 31 பெண்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஓண நடனம் செய்ய வைத்து, அதை யூ டியூபில் வெளியிட்டனர்.

இந்த ஆன்லைன் ஓண நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பிற கலைஞர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது இவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. இது குறித்து அம்பிகா பாலசுப்ரமணியம்
“கோயம்பத்தூர் முதல் வெளிநாடுகளின் வசிக்கும் எங்கள் நட்பு வட்டங்களையும், என்னிடம் நடனம் கற்கும் மாணவிகளையும் ஆன்லைன் மூலமாக அழைத்து இந்த நடனத்தை செய்துள்ளோம். இதில் குழந்தைகள், குமரிகள், குடும்பத்தலைவிகள், பாட்டிமார்கள் என 31 மகளீர் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முறையாயாக நடனம் கற்காதவர்களே. உலகெங்கும் பரவி இருக்கும் இவர்கள் ஜாதி மத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாலும், பாசத்தாலும் நடனத்தோடு உள்ள பற்றினாலும் இணைந்தவர்கள். தொழில் நுட்ப ரீதியாக குறைகள் இருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்து வாழும் எங்களது முயற்சி மற்ற கலைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response