ஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்

மணி ரத்னத்தின் “வானம் கொட்டட்டும்”, விஜய்யின் “மாஸ்டர்” மற்றும் “முருங்கைக்காய் சிப்ஸ்” ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் “இராவண கோட்டம்” திரைப்படம் தனது திரை வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்று ஷாந்தனு திடமாக நம்புகிறார்.

இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி, “பொறுமையும் விடாமுயற்சியும் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து இடையூறுகளை இல்லாமல் செய்யும் அதிசயத்தை நிகழ்த்தும்” என்ற ஊக்கமளிக்கும் உன்னதமான பொன்மொழி எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தாக்கம் எனது தயாரிப்பிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கடந்த ஆண்டே “இராவண கோட்டம்” படத்தை ஆரம்பித்து விட்டோம். செயல் வடிவம் கொடுத்து படத்தை உருவாக்க எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அதிக பட்ச உழைப்பைக் கொடுத்து பணியாற்றுகின்றனர். விக்ரம் சுகுமாரனின் வலுவான ஸ்க்ரிப்ட், ஷாந்தனு பாக்கியராஜ் போன்ற திறமை மிக்க நட்சத்திரங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், ஆகியவற்றுடன் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆண்டுக்கு மூன்று மாதங்களே இருக்கும் கடுமையான கோடை கால சூழலில் முழுக் கதையும் நடைபெறும் வகையில் படத்தின் களம் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியபோது மிகவும் சாதகமான தட்ப வெட்ப சூழலே நிலவியதால் மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகிவிடக்கூடாது என்பதிலும், படத்தின் உள்ளார்ந்த சாராம்சத்தை சிதைத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். ஆயினும், இந்த ஆண்டு இதே பருவத்தில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டிருந்தபோது, உலகையே நிலைகுலையச் செய்த ‘கோவிட் 19’ பெருந்தொற்றால் அது முடியாமல் போனது. தற்போதைய வியாபார சூழலை நான் நன்கு அறிந்திருக்கிறேன் என்றாலும், ஷாந்தனு மற்றும் விக்ரம் சுகுமாரன் திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக இந்தப் படத்தில் முதலீடு செய்து, படத்தை எடுக்க இருக்கிறேன். சுமூகமான சூழல் ஏற்பட்ட பிறகு அரசின் அனுமதி கிடைத்ததும், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் படப்பிடிப்பைத் தொடரவிருக்கிறோம். மேலும் ஷாந்தனு தற்போது கைவசம் வைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய படங்கள், நட்சத்திர ஏணியில் அவரது கிராஃப் சீராக மேல் நோக்கி செல்ல உதவும் என்பதால் எனது “இராவண கோட்டம்” படத்துக்கு அது பெரிதும் பயன்படும்” என்றார்.

நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் இது குறித்து விவரிக்கையில் “இந்த கடுமையான சூழ்நிலையிலும் பொறுமை காத்து, எங்களுக்கு ஆதரவாக இருக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்குதான் எங்கள் குழு முதலில் நன்றி செலுத்த வேண்டும். பல ஆண்டுகளாக எங்கள் குடும்ப நண்பராக இருக்கும் அவர், எனது வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு எனக்காக பிரார்த்தனை செய்பவர். பெரிய தொழில் முனைவோரான அவருக்கு, சினிமாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் எனக்கு ஒரு திருப்புமுனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே “இராவண கோட்டம்” படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார். படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும், பொறுமை காக்கும் அவர், எங்களிடம் “அவசரம் காட்ட வேண்டாம் சிறப்பான முறையில் படத்தை உருவாக்குங்கள்” என்றுதான் சொல்கிறார். தற்போது சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதி காத்து வருகிறோம். ‘இராவண கோட்டம்’ படத்தைத் தொடங்கும்போது கண்ணன் ரவி சார் இனி உனக்கு நல்ல படவாய்ப்புகள் நிறைய வரும் என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே “இராவண கோட்டம்” படம் வெளியாவதற்கு முன்பே, மணி ரத்னம் சாரின் “வானம் கொட்டட்டும்”, விஜய் அண்ணாவின் “மாஸ்டர்”, மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் சில படங்கள் எனக்குக் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்போது எனக்கு அவர் அதிர்ஷ்ட தேவதையாகத்தான் கண்ணுக்குத் தெரிகிறார். அது மட்டுமல்ல, “‘இராவண கோட்டம்” படத்திலிருந்து எனக்கு எந்த லாபமும் வேண்டாம். தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க நான் போட்ட முதலீடு மட்டும் திரும்ப வந்தால் போதும்” என்று அவர் உறுதிபடக் கூறிவிட்டார். சிக்கல் மிகுந்த இக்கட்டான சூழலிலும் கண்ணன் சார் எங்களுடன் இணக்கமாக இருப்பதற்கும், என் மீதும், விக்ரம் சுகுமாரன் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்” என்றார் ஷாந்தனு.

Leave a Response