இயக்குநராக மாறியிருக்கும் நடிகர்

‘ஹிப் ஹாப்’ ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த ஆனந்த், தற்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது குறித்து விவரித்த இயக்குநர் ஆனந்த், “எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன் சாருக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இது எங்களுக்குப் பேருதவியாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் முழு மனதுடன் நட்பை மதித்து நண்பர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அவர் இதை வெளியிட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கண்டிப்பாக இது எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நேர்மறை சக்தியைத் தரும் என நம்புகிறோம்” என்றார்.

நட்பு குறித்த கதை என்பதால், இது குறித்து இயக்குநர் ஆனந்த்தைக் கேட்டபோது, “நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும், குறிப்பாக பதின் பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் ஏற்கெனவே வாழ்வின் பகுதி என்று டேக் லைனில் குறிப்பிட்டதைப்போல், இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்” என்று கூறுகிறார் இயக்குநர் ஆனந்த்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் ‘ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “நண்பன் ஒருவன் வந்த பிறகு” இளம் பிராயத்தினரை கதைக் களமாகக் கொண்ட முழுமையான பொழுது போக்குப் படமாகும். குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இஃப்ரான், சபரீஷ், ஆர்.ஜே.ஆனந்தி, மோனிகா சின்ன கோட்லா, கே.பி.ஒய்.பாலா, குஹன், ஃபென்னி ஆலிவர், டி.எஸ்.ஆர்., வினோத், பூவேந்தன் மற்றும் சாய் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.எச்.காஷிஃப் இசையமைக்க, தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். தி மெட்ராஸ் டச், ராயல் தர்மா புகைப்படக் கலைஞராகப் பணியாற்ற, ராஜேஷ் கண்ணா, மோகன், ஷெரீஃப், ஜெரோம் ரெமிஜியஸ், ஆர்.ஏ.சரத் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கின்றனர்.

Leave a Response