கடந்த முதல் இரண்டு கட்ட ஊரடங்கில் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மூன்றாம் கட்ட ஊரடங்கு முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியது முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.
வரும் 31ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடையுள்ளது. இந்த சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது பேருந்து வசதிகள் அனுமதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.