தமிழக அரசு சாதி பார்த்து வழங்குகிறதா கொரோனா நிவாரணம்?

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் நோய் கொரோனா. இந்தியாவுக்குள் புகுந்து இந்த நோய் பலரை தாக்கி, சிலர் உயிரையும் பறித்துள்ளது. தற்போது அதன் தாக்கம் அதிகமாகியுள்ளதால், இந்தியாவில் முதலில் போடப்பட்ட நாடு முழுவதுமான 21 நாள் ஊரடங்கு, மேலும் 19 நாட்கள் என மே 3ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைவரும் சாதி, மத பேதமின்றி பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகளும், தன்னார்வலர்களும் மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருகின்றனர்.

சில குளறுபடிகள் இருப்பினும், தமிழக அரசு முடிந்த அளவு கஷ்டப்படும் மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சித்து நிவாரண உதவியினை செய்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆட்சியாளராக தற்போது பதவியில் இருந்து வருவது திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார். நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமத்தில் வழங்கப்பட நிவாரண உதவி பற்றிய தகவலை திருவள்ளூர் ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.


அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “Tiruvallur Administration assisted 30 ST families,26 Other Families with Grocery & Vegetables .திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமம் ST இருளர் 30 குடும்பங்கள் மற்றும் BC / MBC குடும்பங்கள் 26 ஆகியவற்றுக்கு அரிசி,மளிகை-காய்கறிகள் வழங்கப்பட்டன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து குறிப்பிட்ட சாதி பெயர்களை குறிப்பிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பதிவிடப்பட்டதுக்கு, ட்விட்டர் வாசிகளிடமிருந்து பல எதிர்ப்பு பதிவுகள் எழுந்துள்ளது. இந்த சாதிய பதிவை கண்டித்து நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கின் இத்தகைய பதிவை பார்க்கும் போது, தமிழகத்தில் சாதியை பார்த்து தான் நிவாரண உதவி வழங்கப்படுகிறாதா என்ற அச்சம் ஏற்படுகிறது. அரசே சாதி பெயரை குறிப்பிட்டு இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிட்டால், சாதி ஒழிக்கப்படுமா என்பது வெறும் கேள்வியாகவே இருக்குமே தவிர சாதி ஒழியாது.


Leave a Response