காவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி ‘BR Talkies Corporation’ சார்பில் ‘White Moon Talkies’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்”. நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் T. சிவா பேசியதாவது,

“இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்” என்று பேசினார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

“உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து, இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தின் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து, மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்” என்று கூறினார்.

நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில்,

“நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. எல்லாத்துறையிலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கும். இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தை காட்டியுள்ளோம்” என்று கூறினார்.

நாயகி ரவீனா பேசியது,

“என்னை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து, மிகசிறந்ததொரு கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநர் RDM அவர்களுக்கு நன்றி. திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெறுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாக தொகுத்து வழங்கி பேசினார்.

“இப்படத்தை தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு, இப்படத்தை தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்த போவதாக கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்று பேசினார்.

சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.
ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். வசனத்துடன், பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

Leave a Response