ஆதியிடம் இருக்கும் நடிப்புத்திறனை வெளிப்படுத்த விரும்பினேன் – சுந்தர் .சி

‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

நடிகை குஷ்பூ பேசும்போது,

“நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்” என்றார்.

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,

“இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள். நானும் அதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன்” என்று கூறினார்.

சண்டை இயக்குநர் பிரதீப் பேசும்போது,

“இப்படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மற்ற படங்களில் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் சிரித்துக் கொண்டே காட்சி அமைக்க வேண்டி இருந்தது” என்றார்.

நடன இயக்குநர் ராஜ் பேசும்போது,

“ஆதியுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஆதிக்கும், இயக்குநர் சுந்தர்.சி-கும் நன்றி” என்று நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் ks.ரவிக்குமார் பேசுகையில்,

“படப்பிடிப்பு நடக்கும்போது நான் ஆதியைத் தேடுவேன். ஆனால், அவர் ஓரமாக ஆடிக் கொண்டிருப்பார். அருகே சென்று பார்த்தால் தான் பாடலுக்கு இசையமைப்பது தெரியும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார்” என்றார்.

ரவிமரியா பேசும்போது,

“நான் எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி-யைத்தான் பின்பற்றுவேன். இப்படத்தில் முதல் பாதியில் வில்லனாக வருவேன். இறுதியில் காமெடியனாக மாறிவிடுவேன். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

இயக்குநர் சுந்தர்.சி எப்படி மூன்று படங்களுக்கும் ஆதியை வைத்தே தயாரிக்கிறார் என்று நினைத்தேன். இப்படத்தில் நடிக்கும்போது தான் ஆதிக்கு பல திறமைகள் இருக்கிறது என்பது தெரிந்தது. இயக்குநர் ரவிக்குமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பேசினார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,

“இப்படத்தில் நான் சிரித்திருக்கிறேன். எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்.

ஆரம்ப காலகட்டத்தில் ராப் பாடகராகத்தான் வந்தேன். நான் சுதந்திர பாடகராக வந்தபோது யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது தென் தமிழகத்தில் ‘ஹிப் ஹாப்’ பெயர் தனி மனிதனின் பெயராக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. சென்னையில் தெருவோரங்களில் ‘வாட்டர் பாட்டில்’ என்ற குழுவுடன் இணைந்தோம். அதன்பிறகு ரேடியோவில் ‘வாடிபுள்ள வாடி’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் பார்த்து இயக்குநர் சுந்தர்.சி என்னை அழைத்தார். பாடலுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அவரிடம் ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது” என்று பேசினார்.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது,

“இப்படம் என்னுடைய தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். சிறு பையனாக வந்து தன்னுடைய நல்ல குணத்தால் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். ‘மீசைய முறுக்கு’ நட்பை மையப்படுத்தும் படம், ‘நட்பே துணை’ விளையாட்டை மையப்படுத்தும் படம். ஆனால், ஆதியிடம் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்த விரும்பினேன். அதன் முயற்சிதான் ‘நான் சிரித்தால்’ திரைப்படம்” என்றார்.

இயக்குநர் ராணா பேசும்போது,

“எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடையை ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.

உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார், இப்படத்தை வெளியிடும் ‘ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ T.முருகானந்தம்.

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய், இவர்களுடன் நடிகை குஷ்பூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘நான் சிரிச்சா வேற லெவல்’ என்ற பாடலை வெளியிட்டு பாடி, ஆடினார்.

Leave a Response