ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது . யுவன் ஷங்கர் ராஜா புகழாரம்

“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது, அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். “எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை. நான் எனது மிகச்சிறந்த உழைப்பை தரவேண்டிய நிலைக்கு உந்தப்பட்டேன். முற்றிலும் புதிதான சில இசைக் கோர்வையை இதில் முயன்றிருக்கிறேன். அதில் ஒன்று 18 நிமிட நீண்ட காட்சியின் பின்னணி இசைக்கோர்வை ஆகும். அந்த காட்சியின் பின்னணி கோர்வை ரெக்கார்டிங்கில் எங்கள் குழுவில் மொத்தப்பேரும் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள். இது ஒரு பெரும் சவலான பணியாக இருந்தது. மிக சமீபத்தில் எனக்கு பெரிதும் மனநிறைவை தந்த படமாக “ஹீரோ” இருந்தது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் படம் பற்றி கூறுகையில்,

“சமூகத்தில் இந்த தருணத்திற்கு தகுந்த செய்தியை அழுத்தி சொல்லும் படமாக “ஹீரோ” இருக்கிறது. படக்குழு அதை சரியாகவும், நேர்த்தியான படைப்பாகவும் தந்திருக்கிறார்கள். பொன்மொழி ஒன்று இருக்கிறது. “ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்று, என்னைப் பொறுத்தவரை இந்த “ஹீரோ” திரைப்படம் “ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது” என்பதை சொல்லும். படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களும் அதனை உணர்வார்கள். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் சார், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால், இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்க முடியாது. அவரால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது” என்று கூறினார்.

2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கத்தில், ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Leave a Response