ராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …

விஷால் நடிப்பில் ‘ஆக்ஷன்’ படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான ‘சக்ரா’படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது.
விஷால் பிலிம் பாக்டரி சார்பில், யுவன் ஷங்கர் ராஜா இசைக்க, அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் ‘சக்ரா’ படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் கூறியதாவது. “குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லரை தேசபக்தியோடு, உருவாகும் படம் தான் ‘சக்ரா’. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும்.

அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு முதலில் தோன்றியது விஷால் தான். ஏனென்றால், இப்படியொரு வலிமையான கதாபாத்திரத்தை படம் முழுக்க சிதையாமல், ஆர்ப்பாட்டமில்லாமல், பக்குவமாக கையாளும் திறமை கொண்டவர் விஷால். விஷால் எதற்காக மிலிட்டரி அலுவலராக இருக்கிறார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கும். கதையோடு சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும். அது படம் பார்க்கும் போது தான் புரியும். மேலும், பெண் காவல் துறை அதிகாரி பாத்திரத்திற்கு வித்தியாசமான முக அமைப்பு கொண்ட நடிகை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஷ்ரத்தா ஸ்ரீனிவாஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கதாபாத்திரத்தைப் பற்றி கூறினேன். அவரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

ரெஜினா கேசன்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஷமீர் முகமதுவும், சண்டை பயிற்சியை அனல் அரசும், கலையை எஸ்.கண்ணனும் கவனிக்கிறார்கள்.
சென்னையில் நடக்கும் கிரைம் கதை என்பதால் சென்னை மற்றும் கோயம்பத்தூரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. 2020-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்”.

இவ்வாறு இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் கூறினார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ படம் வெளியாகும் நாளில் ‘சக்ரா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது பரபரப்பக உள்ளது.

Leave a Response