கோமாளி கதை எனது சொந்த கற்பனையே! திருடப்பட்ட கதை என்பது பொய்!! – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

கோலிவுட் வட்டாரத்தில் சில வருடங்களாக பேசப்பட்டு வரும் விஷயம் ‘கதை திருட்டு’. என் கதையை இந்த இயக்குனர் திருடி அதை படமாகிவிட்டார், படமாக்கி கொண்டிருக்கிறார் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன. அதில் சில செய்திகள் உண்மை என நிரூபணமானது, சில கதைகளின் ஒரிஜினல் கதையாசிரியருக்கு பணம் கொடுத்து அப்படியே அந்த விஷயம் கைவிடப்பட்டுள்ளன என்பது வேறு விஷயம். சமீபத்தில் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தை நாடி அதில் வருண் ராஜேந்திரனுக்கு திருப்திகரமான நீதி கிடைத்தது. பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா, என்ற படத்தின் கதையை தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்று எடுத்துள்ளனர் என்று சில வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் நீதிமன்றத்தை நாடினார் என்பதும் ஒரு கதை.

சமீபத்தில் கதை திருடு என்ற பஞ்சாயத்தில் சிக்கியுள்ள படம் விஜய் நடிக்கும் ‘பிகில்’ மற்றும் ஜெயம் ரவி நடித்து ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகா இருக்கும் திரைப்படமான ‘கோமாளி’. தற்போது நாம் பார்க்கப்போகும் விஷயம் ‘கோமாளி’ கதை திருடு பஞ்சாயத்து.

‘கோமாளி’ திரைப்படத்தின் கதையும் என்னுடைய கதையும் ஒன்றே என இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் சொல்லுவது யாதெனில், ’25+25=25′ என்ற பெயரில் ஒரு கதை எழுதியுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் பார்த்திபன் நடிப்பதாக இருந்தது என்றும் சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இந்த கதையை பலரிடம் தான் சொல்லியுள்ளதாகவும், அந்த கதையை தான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2014ம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்க்கும்போது, அவை அனைத்தும் இவருடைய கதையை போல் இருப்பதாகவும், இது சம்மந்தமாக எழுத்தாளர் சங்கத்தில் தான் புகார் கொடுத்துள்ளதாகவும் சொல்கிறார்.

இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்கம் ‘கோமாளி’ திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தொடர்புகொண்டு பேசியுள்ளது. பிரதீப் ரங்கநாதனிடம் அவருடைய ‘கோமாளி’ படத்தின் கதைச்சுருக்கத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளது, அதையும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கதை திருட்டு பஞ்சாயத்து விஷயமாக ‘ஒற்றன் செய்தி’ இணையத்தளம் சார்பாக ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கராஜனை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய பிரதீப் ரங்கநாதன் தெரிவித்ததாவது இந்த ‘கோமாளி’ படத்தின் கதையை அவர் தன்னுடைய கற்பனையினால் எழுதியது என்கிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவரிடம் ‘கோமாளி’ படத்தின் கதையின் உரிமை கோரி ஒருவர் அவர்களுடைய சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும், எனவே ‘கோமாளி’ படத்தின் கதைச்சுருக்கத்தை அவர்களுடைய அலுவலகத்தில் கொடுக்கும்படியும் கேட்டனாராம். அதன்படி பிரதீப் ரங்கநாதன் எழுத்தாளர் சங்கத்தில் படத்தின் கதைச்சுருக்கத்தை கொடுத்து அனுப்பினாராம். கிருஷ்ணமூர்த்தியின் கதையையும், ‘கோமாளி’ கதைச்சுருக்கத்தையும் ஒப்பிட்டு பார்த்து பிறகு அந்த கதை சம்மந்தமாக ஏதாவது விஷயம் தேவைப்பட்டால் பிரதீப் ரங்கநாதனை மீண்டும் அழைப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் தெரிவித்ததாக பிரதீப் சொல்கிறார்.

மேலும் பிரதீப் கூறுகையில் அவர் குறிப்பிட்டதாவது, ‘கோமாளி’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதை கிருஷ்ணமூர்த்தி பார்த்திருக்கலாம், அப்படி பார்க்கையில் நம்முடைய காட்சிகள் அவருடைய கற்பனை போன்று இருந்திருக்கலாம்! எனவே இந்த ‘கோமாளி’ படத்தின் கதையும் அவருடைய கதையும் ஒன்றே என அவர் சந்தேகப்பட்டிருக்கலாம். “என்னை பொறுத்தவரை ‘கோமாளி’ கதை என்னுடைய சொந்த கற்பனையில் உருவானது. நாங்கள் எந்த ஒரு கதையையும் திருடி படம் எடுக்கவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், பலர் சொல்லும் குற்றச்சாட்டான அந்நிய நாடு படங்களின் தழுவல் தான் என்று சில படங்களை குறிப்பிடுவார்கள், அப்படி எந்த ஒரு தழுவலும் இல்லாத சொந்த கற்பனையில் உருவான கதை தான் ‘கோமாளி’. என முடித்து கொண்டார் ‘கோமாளி’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

‘கோமாளி’ படம் வெளியாகி அதை கிருஷ்ணமூர்த்தி பார்க்கும்போது தான் உண்மை தெரியும் ‘கோமாளி’ கதையும் கிருஷ்ணமூர்த்தி கதையும் ஒன்றா அல்லது வெவ்வேறு கதைகளா என!

Leave a Response