விஷால், கார்த்தி, ஐசரி கணேஷ் சந்திப்பில் நடந்தது என்ன? – ஒரு டீடைல் ரிப்போர்ட்…

2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெற்றது அன்றைய நடிகர் சங்கம் தேர்தல். அதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் சரத்குமார் அணியும் போட்டியிட்டன. அதில் நாசரின் பாண்டவர் அணியாய் சார்ந்த பெரும்பாலான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முக்கிய பொறுப்புக்கு போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் தோல்வியை தழுவினார். அப்போது போட்டியிட்டு வென்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சில வாக்குறுதிகளை அளித்தனர். அதில் முக்கியமானது நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டுவது.

அதில் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் கொடுப்பது ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை கொடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சங்க கட்டிடம் காட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெட்ரா இந்த பாண்டவர் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எஸ்.வி.சேகர் மற்றும் சமீபத்தில் மறைந்த நடிகர் ஜெ.கே.ரித்தீஷ் ஆகியோர் பாண்டவர் அணியிலிருந்து வெளியேறினார். அப்போது இந்த கருத்து வேறுபாடுக்கு காரணம் ஜஸ்ட் ஒரு ஈகோ க்ளாஷ் என்று தெரிய வந்தது. இந்த ஈகோ க்ளாஷ் எஸ்.வி.சேகரை அதிகமாக உருத்தியதால், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இடையூறாக எஸ்.வி.சேகர் CMDA’வில் சில புகாரை கொடுத்தார், வழக்கையும் தொடுத்தார். இதன் காரணமாக நடிகர் சங்கம் கட்டிட பணி ஆரம்பிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர், நடிகர் சங்கம் கட்டுவதற்கு இருந்து வந்த தடைகளை நாசரின் அணி வென்றது. நடிகர் சங்க கட்டிட பணி ஜரூராக ஆரம்பிக்கப்பட்டு 50 சதவிதம் பணி முடியும் தருவாயில் இந்த அணியின் நடிகர் சங்கத்தின் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது. பின்னர் நாசர் தலைமையிலான அணி நீதிமன்றத்தில் வழக்கை வாதாடி சுமார் 6 மாத கால நீட்டிப்பு பெற்றது. அந்த 67 மாத காலத்தில் நடிகர் சங்க கட்டிடத்தின் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, மீதி கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நேரத்தில் விஷாலுடன் நெருக்கமாக இருந்து வந்த நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், தங்களுடைய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது விஷால் கண்டுகொள்ளவில்லை என்று காரணம் சொல்லி விஷால் அணியிலிருந்து பிரிந்து வந்தனர். பிரிந்து வந்த இவர்கள் இருவரும், வரப்போகும் நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட போவதாக பேட்டிகள் கொடுத்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்தது என்ன?
நடிகர் சங்கத்தின் பாண்டவர் அணிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் கல்வியாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவரான ஐசரி கணேஷ். நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது, நடிகர் சங்க கட்டிட பணிக்கு நன்கொடை கொடுப்பது, நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி புரிவது என, நடிகர் சங்கத்துடன் துணையாக இருந்து வந்தார். நாசர், விஷால், கார்த்தி என நடிகர் சங்க பொறுப்பாளர்களுடன் நல்ல உறவோடு இருந்து வந்தார் ஐசரி கணேஷ். இப்படிப்பட்ட ஐசரி கணேஷுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையில் பிரச்சனை சற்று புகைக்க ஆரம்பித்தது. அந்த புகைச்சல் தான் என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.

ஐசரி கணேஷின் பிறந்தநாள் மற்றும் அவருடைய தந்தை ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாள் அன்று, ஐசரி கணேஷ் தன்னுடைய கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்வது வழக்கம். நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு, நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரை அந்த விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஐசரி கணேஷ் அழைத்து வந்தார். இந்த விழாக்களின் அழைப்புகளை ஏற்று இவர்களும் கலந்துக்கொண்டு வந்தனர். சமீபத்தில் நடந்த இரு விழாக்களுக்கு ஐசரி கணேஷால் அழைக்கப்பட்ட விஷால், ஏதோ காரணத்தினால் கலந்து கொள்ளவில்லையாம். இந்த இரு விழாக்களில் விஷால் கலந்துகொள்ளாதது ஐசரி கணேஷின் ஈகோவை அதிகம் பாதித்துள்ளது.

விஷால் மீது கோபமடைந்த ஐசரி கணேஷ் தன்னுடைய மற்றும் விஷாலுக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதை அறிந்த விஷால், அந்த விழாக்களுக்கு தான் வராமல் போனதற்கான காரணத்தை சொல்லியுள்ளார். ஆனால் விஷாலின் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத ஐசரி கணேஷ் விஷாலை புறக்கணிக்க செய்தார். ஐசரி கணேஷின் இந்த புறக்கணிப்பு, விஷாலுக்கு எதிரானவர்களுக்கு ஒரு சிம்மசொப்பனமாக அமைந்தது. எதிரிகள் அனைவரும் ஒன்று கூடி ஐசரி கணேஷை பார்த்து பேசியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பே ஐசரி கணேஷிடம் பேசிய விஷாலுக்கு எதிரானவர்கள், அவரை நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியினை உருவாக்கி அதில் போட்டியிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போது ஐசரி கணேஷ் சற்று தயக்கம் காட்டியுள்ளார். பின்னர் இந்த எதிரணியினர் தொடர்ந்து ஐசரி கணேஷை நடிகர் சங்கம் தேர்தலில் ஒரு அணியை உருவாக்கி அவரை போட்டியிட வற்புறுத்தியுள்ளார்.

சில தினங்களாக நடந்து வருவது என்ன?
இவர்களின் வற்புறுத்தலுக்கு ஒத்துக்கொண்ட ஐசரி கணேஷ் சில தினங்களுக்கு முன்புதான் ஒரு புதிய அணியை உருவாக்கி இந்த நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அதன்படி ஆரம்பமான இந்த புதிய அணியில் ஐசரி கணேஷ் பொது செயலாளராக போட்டியிட முடிவு செய்தார். நடிகர் உதையாவை துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர். இந்த இரு பொறுப்புக்கள் பெயர்கள் தான் முதலில் முடிவானது. தலைவர் பதவியில் நாசருக்கு எதிராக யாரை நிறுத்துவது என்று யோசித்து, இரு தினங்களுக்கு முன்பு ஐசரி கணேஷ் அவர்கள் பாக்யராஜிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த புதிய அணியை பற்றி சொல்லியுள்ளார். நேற்று நடிகர் பாக்யராஜை ஐசரி கணேஷ் அணியினர் நேரில் சந்தித்து இது பற்றி பேசி அவரை தலைவர் பதவியில் நிற்கும்படி கேட்டுள்ளனர், அவர் அதற்க்கு யோசித்து சொல்லுவதாக அவர்களிடம் சொல்லி அனுப்பியுள்ளனர்.

மிரட்டிய ஐசரி கணேஷ்! சவால் விட்ட விஷால்!!
இது ஒரு புறமிருக்க, நேற்றைய முன்தினம்(ஜூன் 06, 2019) விஷால் மற்றும் கார்த்திக்கு ஆகிய இருவருக்கும் ஐசரி கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார். ஐசரி கணேஷின் அழைப்பை ஏற்று, நேற்றைய முன்தினம் இரவு விஷால் மற்றும் கார்த்தி ஐசரி கணேஷை சென்னை நந்தனத்தில் உள்ள ஐசரி கணேஷ் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது.

அப்போது ஐசரி கணேஷ், விஷாலிடம் முதலில் கேட்ட கேள்வி, “எதற்க்காக நீங்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தீர்கள்? உங்களுடைய இந்த செயல், தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக’விற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.” என்று சொல்லியுள்ளார். அதற்க்கு விஷால், “எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் நண்பர்கள். நான் சிறு வயதிலிருந்து அவர்களுடைய கோபாலபுரம் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம், உதயநிதி என்னுடைய வகுப்பு தோழன். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பதிலளித்துள்ளார். மீண்டும் பேசிய ஐசரி கணேஷ், ஆளும் அதிமுக கட்சி உங்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது. எனவே நீங்கள் சற்று மதித்து நடக்க வேண்டும். உங்கள் மீது தமிழக அரசு வழக்கு ஏதாவது போட்டு உங்களை கைது கூட செய்ய கூடும். எனவே உஷாராக இருங்கள்.” என்று மறைமுக மிரட்டலாக ஐசரி கணேஷ் எச்சரித்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. “இந்த தேர்தலில் காவல் துறை அதிக அளவில் பந்தோபஸ்தில் இருக்குமென்றும், அங்கு ஏதாவது காரணம் காட்டி உன்னை காவல்துறை கைது செய்ய வாய்ப்புகள் உள்ளது. எனவே நீ இந்த முறை நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட கூடாது.” என ஐசரி கணேஷ் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையை கேட்ட விஷாலும் கார்த்தியும் கடுப்பாகியுள்ளனர். கடுப்பான விஷால், “நான் ஏன் போட்டியிட கூடாது? நீங்கள் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறீர்களா?” என ஐசரி கணேஷிடம் விஷால் கேட்டுள்ளார். அதற்க்கு ஆமாம் போட்டியிட போறேன் என்று ஐசரி கணேஷ் பதிலளித்துள்ளார். “ஆளும் அதிமுக அரசு சார்பாக தான் என்னுடைய தலைமையில் இந்த நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிடுகிறோம். காவல்துறை மற்றும் ஆளும் அதிமுக அரசு எங்கள் அணிக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. பணம் கொடுத்தால் நாடக நடிகர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். உங்கள் அணி போட்டியிட்டால், உங்களுக்கு தோல்வி நிச்சயம். என்னுடைய 26 கல்வி நிறுவனங்களை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், நான் ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்க வேண்டும்.” என்று ஐசரி கணேஷ் சொல்ல, “நீங்கள் உங்கள் சொத்தை காப்பாற்றி கொள்ளுங்கள், நான் என்னுடைய மனசாட்சிப்படி, இந்த நடிகர் சங்கம் சொத்தை காப்பாற்ற விரும்புகிறேன்.” என ஐசரி கணேஷிடம் விஷால் சொல்ல, “கிளம்பு மச்சான்.” என்று கார்த்தி சொல்ல, இருவரும் அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள் என்று நமக்கு ஒரு ஒற்றன் சொன்னார்.

தேர்தல் கலத்தில் இறங்கிய பாக்யராஜ்…
இன்று ஓகே சொன்ன பாக்யராஜை, அவருடைய இல்லத்தில் ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய அணியினர் நேரில் சந்தித்து பாக்யராஜின் வேட்பாளர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடமிருந்து கையொப்பம் பெற்று சென்றுள்ளனர். இன்று மாலை பாக்யராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் அமைத்த புதிய அணியின் நடிகர் சங்க வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

23 ஜூன் 2019 அன்று சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடிகர் சங்கம் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை வந்த தகவல்களின் படி நாசர் தலைமையிலான அணியும், பாக்யராஜ் தலைமையிலான அணியும் இந்த முறை நடக்கவிருக்கும் நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்கள். வேறு ஏதாவது அணிகள் போட்டியிட்டால் அதை பற்றி சொல்லுவோம் என்று சொல்லிவிட்டு இங்கிருந்து நாம எல்லோரும் கிளம்புவோம்.

Leave a Response