சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது பினராயி விஜயன் திட்டவட்டம்..!

பெண்களை சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்துவதற்கு அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பெரும் கலவரம் வெடித்தது.

ஆனாலும், வரலாற்று பதிவாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை, பினராயி விஜயன் தலைமையிலான அரசு அனுமதித்தது. இன்னும், போலீசாரின் பாதுகாப்போடு பெண்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதற்கு, காங்கிரஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து சுத்திகலச பூஜைக்காக கோவில் நடை அடைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.

நடைதிறக்கும் நாட்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருகை தருவது தொடர்ந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, சபரிமலை கோவில் விவகாரத்தால், கேரளாவில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், கேரள சட்டசபை கூட்டத்தில் அவர் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்றும் கூறினார்.

சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வியடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் பேசினாலும், சபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Response