ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR..!

முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், STR உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது,

“நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. படப்பிடிப்பு மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, STR உடனான தருணங்களே என்னை உற்சாகப்படுத்துகின்றன.

அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, STR ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, “சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம். நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தபோது, அவர் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, படப்பிடிப்புக்கு தயார் செய்யும் வரை இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார்.

மேலும், அவராகவே வெளியே வந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டு விட்டு போவார். ஒரு காட்சி முடிந்தவுடன் ஒரு நன்றாக வந்திருக்கிறதா என ஒரு குழந்தையை போல ஆர்வமாக விசாரிப்பதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள், படப்பிடிப்பில் அவருடன் இருந்து பாருங்கள். எல்லா நேரத்திலும் அவருடன் இருக்க வேண்டுமென உங்களிடம் அவர் கேட்கவில்லை, ஆனால் அவருடைய தேவைகளை புரிந்துகொள்ளுங்கள். அவர் உங்களுடையவர். தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக எல்லா இடங்களிலும் பயணம் செய்கிறார். ஹன்சிகா மோத்வானி முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது” என்றார்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்து வரும் இந்த மஹா படத்தின் கோவா படப்பிடிப்பை முடித்து விட்டு மொத்த குழுவும் சென்னை திரும்ப இருக்கிறது. ஜிப்ரான் (இசை), ஜே லக்‌ஷ்மண் (ஒளிப்பதிவு), ஜேஆர் ஜான் ஆபிரஹாம் (படத்தொகுப்பு), மணிமொழியன் ராமதுரை (கலை), கார்க்கி (வசனம்), ஷெரிஃப், பாப்பி (நடனம்), ரேஷ்மா சஞ்செட்டி, அர்ச்சனா மேத்தா (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

Leave a Response