என் உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை என் மேல் போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன் – “ஓபிஎஸ்” உருக்கமான அறிக்கை..!

கடந்த சில நாட்களாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவில் இணையவிருப்பதாக அமமுகவினர் கூறி வரும் நிலையில் இதனை வதந்தி என ஏற்கனவே மறுத்துள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ், நேற்று ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய் என்றும், என் உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை என் மேல் போர்த்துவதையே என்னுடைய வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன் என்றும் என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ‘மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர் என்றும், என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன் என்றும், அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு விவசாயி மகனாக பிறந்த என்னை பல உச்சங்களில் அமர்த்தி மக்கள் திலகமும், மகராசி தாயும் உயிராக போற்றிய இயக்கத்தை, இக்கட்டான காலத்தில் அன்புச்சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு இணை கரம் கொண்டு இந்த இயக்கத்தை இமையாக காத்து வருவதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response