தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொள்ள நரேந்திர மோடிக்கு பெரியார் புத்தகங்களை பரிசளிக்கபோகிறேன் – பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சுவாரஸ்ய பேச்சு..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரியார் புத்தகங்களை பரிசளிக்கப்போவதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தேனி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேனி பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று மாலை உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில், அனைத்து பிரிவு மக்களிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.

தமிழகத்திலுள்ள பல மாணவ, மாணவிகளுக்கும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளதை அறிந்தேன். மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்தார். எனவேதான், எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ஏற்பதும், விடுவதும் தமிழக அரசின் விருப்பம் என கூறியுள்ளோம். எதையுமே தமிழகத்தின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம்.

விவசாயிகள், ஏழைகள், பெண்களிடமிருந்து நரேந்திர மோடி பணத்தை திருடிக் கொண்டார். நமது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தையெல்லாம், வங்கிகளில் கொண்டு சென்று செலுத்த வேண்டும் என்று மோடி வற்புறுத்தினார். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் கொள்ளைக்கார வரியை விதித்தார். 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது உலகில் எங்குமே இல்லாதது.

உங்களிடமிருந்து எடுத்த இந்த பணத்தை, தனது நண்பர்கள் அனில் அம்பானி, அதானிக்கு கொடுத்தார். மக்களிடம் வாங்கும் சக்தி குறையும்போது, தயார் செய்யும் பொருட்களை வாங்க ஆளில்லாமல் தொழில் மந்தமாகிறது. தொழிற்சாலைகள் உற்பத்தி நின்று விடுகிறது. எனவே வேலையில்லா திண்டாட்டம் பெறுகிறது. நரேந்திர மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தின.

பெட்ரோலை காலி செய்துவிட்டு, இன்ஜினை ஆன் செய்து சாவியை 15, பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் அரசு, பெட்ரோலை நிரப்பி, சாவியை மக்களிடம் கொடுக்கப்போகிறது. அதன்பிறகு பொருளாதாரம் வளர்ந்து நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால், நரேந்திர மோடி இதனால் மகிழ்ச்சியடைய மாட்டார். ஏனெனில் அப்போது மதக்கலவரங்கள் இருக்காது. பணக்காரர்களுக்கு பணத்தை தூக்கி கொடுக்க முடியாது. நாம் ஒவ்வொருவரையும் பரஸ்பரம் மதிப்பதன் மூலம், மோடியை எதிர்ப்போம். தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆட்சி நடத்த விரும்புகிறார் மோடி. தமிழகத்தின் வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே நான் பெரியார் பற்றிய, புத்தகங்களை நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளேன். கருணாநிதி பற்றிய புத்தகங்களையும் கொடுக்கப்போகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டை பற்றி அப்படியாவது மோடி தெரிந்து கொள்ளட்டும்.

தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் தங்களை யாரும் அடக்கியாள விட்டதில்லை. உலகத்தில் எந்த சக்தியாலும், தமிழர்கள் விரும்பாததை செய்ய வைக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பாலும், கோபத்தாலும், தமிழர்களை எதுவும் செய்ய முடியாது. அன்பாலும், நட்பாலும் அவர்களை எதையும் செய்ய முடியும்.

Leave a Response