கூட்டணி கட்சிகளுடன் கோவையில் இன்று “பிரதமர் மோடி” பிரச்சாரம்..!

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். அவர் வருகையை ஒட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தவற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வருகிறார்.

இதற்காக மாலை 6.45 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை கொடீசியா மைதானத்துக்கு செல்கிறார்.

அங்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள். பிரதமர் மோடி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரவு 8.15 மணி அளவில் கோவை விமான நிலையம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி இன்று வருவதையொட்டி கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர கமிஷ்னர் சுமித் சரண் தலைமையில் 2 டிஐஜிக்கள், 5 எஸ்பிக்கள் மற்றும் 4 கூடுதல் டிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவினர் ஏற்கனவே கோவை வந்து பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

 

Leave a Response