கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான போது சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமின்றி படத்தின் இயக்குநருக்கும் திரைத்துறையில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
‘வா வா பெண்ணே’ என்ற முதல் பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது படத்தின் டீசர் மற்றும் பாடல்களை வெளியிட்டுள்ளது.
இதற்காக நடந்த விழாவில் கலந்துகொண்டு சூர்யா பேசும்போது, “எங்களது தயாரிப்பு நிறுவனத்தில் கோவிந்த் வசந்தா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். அதுவே மிகப்பெரிய சந்தோஷம். படத்தின் இயக்குநர் விஜயை பார்த்தபின்பு தான் நான் உறியடி படம் பார்த்தேன். சினிமாவுக்கு வந்து ஒருவர் உண்மையா இருக்க முடியுமா, விட்டுக் கொடுக்கிற விஷயம், ஒரு விஷயத்தை எடுத்து எப்படி அதில் நேர்மையாக இருக்க முடியும் என்று விஜயை பார்த்து ரொம்பவே இம்பிரஸ் ஆனேன்.
எனக்கு ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் இருக்கிறது. ஆனால் எதுமே இல்லாமல் அவர் உறியடி படம் இயக்கியிருக்கிறார் என்றால் அதுதான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எதுவுமே பொய்யாக இல்லாமல் உண்மையாக இருந்தது உறியடி படத்தில். ஆனால் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்ததில் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்தப் படம் உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்காது. உங்களை யோசிக்க வைக்கும்” என்று கூறினார்.