காதலும் இளம் தலைமுறையினரும் “ஜூலை காற்றில்” விமர்சனம் இதோ..!

பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் நாயகன் அனந்த் நாக், காதலிக்க ஆள்கிடைக்காமல் அல்லாடுகிறார். அப்போது அவருக்கு அஞ்சு குரியனின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் டேட் செய்கிறார்கள். அஞ்சுவுக்கு அனந்த் மீது காதல் வருகிறது. ஆனால் அனந்த்துக்கு அஞ்சு மீது பெரிய ஈர்ப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் சம்யுக்தா மேனன் மீது அனந்த்துக்கு காதல் வருகிறது. தனக்கான ஜோடி சம்யுக்தா என முடிவெடுக்கும் அனந்த், அஞ்சுவுடன் பிரேக்கப் செய்துவிட்டு, சம்யுக்தாவுடன் காதல் சல்லாபல் செய்கிறார். ஒரு கட்டத்தில் சம்யுக்தாவுடன் பிரேக்கப் ஆகிறது. கடைசியில் இந்த முக்கோண காதல் என்ன ஆகிறது என்பதை ஒவ்வொருவர் கோணத்தில் இருந்தும் விவரிக்கிறது படம்.

இந்த காலத்து இளைஞர்கள் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு அலைபாய்கிறார்கள் என்பதை அனந்த் நாக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார். அதனை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையின் மூலம் விவரித்து, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

அனந்த் நாக்குக்கு நாயகனாக முதல் படம். குழப்பமாகும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார். சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் என இரண்டு கதாநாயகிகளும் படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறார்கள். அஞ்சு குரியன் சேலையில் அழகாக வந்து காதலிக்க வைக்கிறார். சம்யுக்தா மேனன் தன் பங்குக்கு மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். இரண்டு கதாநாயகிகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

படத்தை கலகலப்பாக நகர்த்துவது சதீஷ் தான். தனது வழக்கமான ஒன்லைன் கவுண்டர் வசனங்கள் மூலம் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும், தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

இது போன்ற காதல் படத்துக்கு இசை மிகவும் முக்கியம். ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையும் முழுமையை அளித்திருக்கிறது. சேவியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் வண்ணமயமாக இருக்கிறது. அதுவும் காதல் காட்சிகளை ரசித்து, ருசித்து எடுத்திருக்கிறார். நிறுத்தி, நிதானமாக, மிக பொறுமையாக எடிட் செய்திருக்கிறார் அனுசரன்.

படம் ஆரம்பத்தில் இருந்தே மெல்ல நடை போட்டு நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து காட்சிகள் விரிவதால், பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

காதலில் ஏற்படும் மனக்குழப்பங்களை தெளிவாக சொன்ன விதத்தில் இந்த ஜூலை காற்றில், இளைஞர்களுக்கான ஒரு தென்றலாக மாறி இருக்கிறது.

Leave a Response