“தடம்” திரை விமர்சனம்..!

ஒரு கொலை வழக்கு, அதில் சம்மந்தப்படும் ஓரே உருவம் கொண்ட இரட்டையர், அவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிக்க முடியாமல் அலையும் போலீசின் திண்டாட்டம் தான் ‘தடம்’.

சிவில் இன்ஜினியரான எழிலுக்கு (அருண் விஜய்), தீபிகா (தன்யா ஹோப்) மீது காதல். தீபிகாவும் எழிலின் காதலை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையே, யோகி பாபுவுடன் கூட்டணி அமைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கவின் (மற்றொரு அருண் விஜய்). பெண்களை சல்லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் கவின், வழக்கறிஞர்களுக்கே தெரியாத சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்.

இருவரும் வெவ்வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது, இருவரில் ஒருவர், அஜய் என்பவரை கொலை செய்துவிடுகிறார். இந்த வழக்கை கையில் எடுக்கும் உதவி ஆய்வாளர் வித்யா பிரதீப், எழிலைக் கைது செய்கிறார். அப்போது எதேச்சையாக டிரங் அண்ட் டிரைவ் வழக்கில் சிக்குகிறார் கவின். இதனால் போலீசாருக்கு யார் கொலையாளி என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரில் யார் உண்மையான கொலையாளி? அவரை போலீசார் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பது தான் விறுவிறுப்பான மீதிப்படம்.

தடையற தாக்க மூலம் தடம் பதித்த மகிழ் திருமேணி, இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது தடத்தை அழுத்தமாக பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமர வைக்கிறார். நல்ல க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது.

பொதுவாகவே மகிழ் திருமேனியின் முந்தைய படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்திலும் அதில் நம்மை அவர் ஏமாற்றவில்லை. தடையறத் தாக்க படத்தைப் போலவே, இப்படத்திலும் பெண்களின் உள்ளாடையை வைத்து உருவாக்கப்பட்ட காதல் காட்சிகள் முகம் சுளிக்க வைக்காமல் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இரட்டையர் கதை ஒன்றும் புதிதல்ல. இரட்டையரில் ஒருவர் தப்பு செய்ய, மற்றொருவர் போலீசில் சிக்கிக் கொள்ள என ஏற்கனவே இதேபோன்ற இரட்டையர் படங்கள் பல வந்திருக்கிறது. ஆனாலும், தனது திரைக்கதை மூலம் படத்தை புதிதாக காட்டி இருக்கிறார் மகிழ் திருமேனி. இருவரில் யார் குற்றவாளி என பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு, நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு, டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் ஆய்வாளர் பெப்சி விஜயன், உதவி ஆய்வாளர் வித்யா பிரதீப் உள்ளிட்ட போலீசார் திண்டாடும் போது நமக்கே பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சோனியா அகர்வாலின் பிளாஷ் பேக் பகுதி, படத்தின் விறுவிறுப்பை கொஞ்சம் குறைத்துவிடுகிறது. படத்தை உன்னிப்பாக கவனித்தால், இவர் தான் குற்றவாளி என ஒரு கட்டத்தில் யூகித்துவிடலாம் என்பது திரைக்கதையில் உள்ள சின்ன ஓட்டை.

நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த பரிசாக, வெற்றியை ருசிக்கும் காலம் அருண் விஜய்க்கு. முதன்முறையாக இரட்டையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள போதும், உடல்மொழியில் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார். உடம்பை செம பிட்டாக வைத்திருப்பது அருண் விஜய்க்கு கைவந்தக் கலை போலிருக்கிறது. இன்னமும் சிக்ஸ் பேக் காட்டி மிரளவைக்கிறார். இரட்டையர் ஆக்ஷன் காட்சிகள் மிரள வைக்கின்றன.

படத்தில் மூன்று கதாநாயகிகள். அதில் வித்யா பிரதீப்புக்கு மட்டும் தான் நடிப்பதற்கு வாய்ப்பு. பெண் உதவி ஆய்வாளராக மிடுக்காக வரும் அதேவேளையில், வழக்கை முடிக்க முடியாமல் திணறும் போது கவனம் ஈர்க்கிறார். அருண் விஜய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் வரும் தன்யா ஹோப்பிற்கு இரண்டு லிப் லாக் காட்சிகள். நன்றாகவே ஈடுகொடுத்து ரொமான்ஸ் செய்திருக்கிறார். கவினை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வந்து போகிறார் ஸ்ம்ருதி வெங்கட்.

யோகி பாபு , பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் உள்பட படத்தில் வரும் மற்ற நடிகர்கள் தங்கள் பங்களிப்பை மிகையில்லாமல் செய்திருக்கிறார்கள். அருண் ராஜ் இசையில் விதி மதியே பாடல் மிகச் சிறப்பு. இணையே பாடலும், தப்புத்தண்டா பாடலும் தம்ஸ்சப் சொல்ல வைக்கின்றன. பின்னணி இசையிலும், தனது தடத்தை பதித்திருக்கிறார் அருண் ராஜ்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு குற்றத்தின் இருளையும், காதலின் ஒளியையும் வெவ்வேறாக பிரித்து காட்டுகிறது. படத்துக்கு தேவையான காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கில், தடம் மாறாமல் பயணிக்கிறது படம். கொஞ்சம் சொதப்பிருந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கும்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் எட்டிப்பார்க்கின்றன. ஆனால் வேகமாக நகரும் காட்சிகள், அதனை மறைத்துவிடுகின்றன. விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகள் என பார்வையாளர்களின் மனதில் தடம் பதிக்கிறது இந்த தடம்.

Leave a Response