வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை – சென்னை உயர் நீதிமன்றம்..!

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகைவழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றுஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், “ஏற்கனவே தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்கிறது. மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது அரசுக்கு மேலும் நிதிச்சுமையை கொடுக்கும். எனவே பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்யநாராயணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், “அரசு அறிவித்துள்ள ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை அனைவருக்கும் ஏன் வழங்கப்படுகிறது? இந்த பணம் மக்கள் வரிப்பணம் தான். கட்சிப்பணம் ஒன்றும் இல்லை.

நீதிபதியாக இருக்கும் எனக்கு எதற்கு ரூ.1,000?அதற்கு பதிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகைவழங்கலாம். மீதியுள்ள பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி, மருத்துவ உதவி, கல்வி வசதி உள்ளிட்டவை ஏற்படுத்திக்கொடுக்கலாம்” என்று கூறி பொங்கல் பரிசுத் தொகை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும்,அரசின் கொள்கை முடிவுகளில் தவறு இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Leave a Response