தமிழக அரசு நினைத்தால் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் ? வைகோ சாடல்..!

தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று வழக்கை விசாரித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லும், அதற்கு தடை விதிக்க முடியாது என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியினரும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஸ்டெர்லைட் வழக்கில் என்னையும் சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்கலாம் என்று சொல்லவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் சொல்லியுள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெலைட்டை தடுக்க முடியும். ஆனால் கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை . இருப்பினும், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று வைகோ கூறினார்.

Leave a Response