‘துப்பாக்கி முனை’ விமர்சனம் இதோ..!

யாரோ செய்த குற்றத்திற்காக பலியாடாக்கப்படும் ஒரு அப்பாவியைக் காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் சகாப்தமே துப்பாக்கி முனை திரைப்படம்.

மும்பையின் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியான விக்ரம் பிரபு குற்றவாளிகளை நடுநடுங்கச் செய்யும் அரக்கன். குற்றவாளி என தெரிந்தாலே அவர்களை சுட்டுக்கொல்லும் மகனுடன் இருக்கப் பிடிக்காமல் பிரிகிறார் அவரது தாய். இதற்கிடைய ஒரு என்கவுன்டர் சம்பவத்தின் போது ஹன்சிகாவை பார்த்து காதலில் விழுகிறார் விக்ரம் பிரபு. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் வேலை காரணமாகவே ஹன்சிகாவையும் பிரிகிறார்.

இந்நிலையில், ஒரு என்கவுன்டர் சம்பவத்தால், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் அவர்.போலீஸ் வேலையும் இல்லாமல் தவிக்கும் அவருக்கு, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் போலீஸ் பணி தரப்படுகிறது. ராமேஸ்வரத்தில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பீகாரை சேர்ந்த ஒரு மாவோயிஸ்ட்டை என்கவுண்டர் செய்ய சொல்லி அனுப்புகிறார்கள். அங்கு சென்ற பிறகு தான் விக்ரம் பிரபுவுக்கு உண்மையான குற்றவாளி வேறு யாரோ என்பது தெரிய வருகிறது. பீகார் வாலிபரை விக்ரம் பிரபுவால் காப்பாற்ற முடிந்ததா என்பதே விறுவிறுப்பான மீதிப்படம்.

படத்தை மிக ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி திருப்பங்கள் என திரைக்கதையில் அதிக கவனம் செலத்தியிருக்கிறார்.

என்கவண்டர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு செம பிட். ஒரு மாஸ் ஆக்ஷன் திரில்லர் படத்துக்கு தேவையான நடிப்பைச் சரியாக தந்திருக்கிறார். அம்மாவை நினைத்து ஏங்குவது, காதலியை நினைத்து உருகுவது, அப்பாவி இளைஞனுக்காக தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொள்வது என சிறப்பாக செய்திருக்கிறார். 60 வயது மாநிறத்துக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் அமைந்திருக்கிறது விக்ரம் பிரபுவுக்கு.

நீண்ட நாட்கள் கழித்து ஹன்சிகாவை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. பப்ளி பேபி இப்போ ஸ்லிம் ப்யூட்டியாக மாறி ஜொலிக்கிறார். படத்தில் அவருக்கு ஐந்தாறு காட்சிகள் மட்டுமே. இதனால் பெர்பாமன்ஸ் செய்வதற்கெல்லாம் இடம் இல்லை.

எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பை பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக வாழ்ந்திருக்கிறார். இதேபோல பீகார் இளைஞனாக நடித்துள்ள மிர்ச்சி ஷா, வேலராமூர்த்தி,அபிராமி, சங்கிலி முருகன் மற்றும் ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்துள்ள பலரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதை தாங்கிப் பிடித்து அருமையாக நகர்த்துகின்றன பின்னணி இசையும், ஒளிப்பதிவும். பின்னணி இசைக்கோர்ப்புக்காக மாசடோனியா வரை சென்றது நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. இசையமைப்பாளர் எல்.வி.முத்துகணேஷுக்கு பாராட்டுகள்.

ராமேஸ்வரம் தீவை இத்தனை அழகாக காட்டியதற்காகவே ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கு தனி கைதட்டல்கள். எந்தவொரு காட்சியையும் எல்லை மீறாமல் அழகியலோடு எடுத்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது ராசாமதியின் ஒளிப்பதிவு. அதேபோல புவன் சீனிவாசின் எடிட்டங்கும் படத்தை போரடிக்காலம் கொண்டு செல்ல உதவியிருக்கிறது. குழப்பம் ஏற்படுத்தாத நேர்த்தியான படத்தொகுப்பு.

 

Leave a Response