வெற்றிச் செல்வன் இயக்கத்தில், பிரசாந்த் நடித்துள்ள ‘ஜானி’ திரைப்படம் இந்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட்டில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் 1990இல் திரையலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இப்படத்தினைத் தொடர்ந்து ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘ஜீன்ஸ்’, ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர்.
இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். சில வருடங்களாக இவர் நடிக்கும் படங்கள் தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில், தற்போது வெற்றிச் செல்வன் இயக்கத்தில், ‘ஜானி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படமானது இந்தியில் 2007இல் வெளியான ‘ஜானி கடார்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபு, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா, தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.