ஸ்தம்பித்தது டெல்லி : விவசாயிகள் போராட்டம் ,போக்குவரத்து நெரிசல்..!

டெல்லியில் போராடும் அகில இந்திய விவசாயிகள், தங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம், கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் இன்று விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு உள்ளனர்.

இன்னும் சில மணி நேரத்தில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட இருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த போராட்டத்தில் 29 மாநில விவசாயிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் பலர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள். உத்தர பிரதேசம் , குஜராத், கோவா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இதில் 4 லட்சம் விவசாயிகள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருந்து 1000 விவசாயிகள் மட்டுமே சென்று இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து 50 ஆயிரம் விவசாயிகள் வரை சென்றுள்ளனர். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே அவருக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது இதுவே முதல்முறை.

அதேபோல் யோகியின் உத்தர பிரதேச விவசாயிகளும் 1 லட்சம் பேர் வரை இதில் திரண்டு உள்ளனர். அவர்கள் இதில் சொல்லும் முழக்கம் கவனிக்க வேண்டியது. எங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம்.. கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது பாஜகவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பாஜக தங்களை ஏமாற்றிவிட்டதாக விவசாயிகள் கூறி வருகிறார்கள். மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.

Leave a Response