மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

மாய மந்திரத்தால் கரண்டை சீர் செய்ய முடியாது கொடைக்கானலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

கஜா புயலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று கொடைக்கானல். இந்த வழியாகத்தான் புயல் கரையை கடந்த நேரம் சூறாவளி காற்று அடித்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 பேர் புயலுக்கு உயிரிழந்தனர். அங்கு ரூ.250 கோடி நிவாரண உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த உதவியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, “பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் மட்டும் 168 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் 1098 உயரழுத்த மின்கம்பங்களும் 4,196 குறைந்தழுத்த மின்கம்பங்களும் சேதம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் எல்லாம் சீர்செய்யப்பட்டு பெரும்பாலும் எல்லா இடங்களுக்கு கரண்ட் வந்துவிட்டது. கொடைக்கானலில் மட்டும் இன்னும் 14 கிராமங்கள்தான் பாக்கி.

அங்கேயும் வேலை நடந்து வருகிறது. சும்மா சொல்லக்கூடாது, மாவட்ட கலெக்டர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். இது ஒன்றும் அவரை ஐஸ் வைக்க நான் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை” என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்கள், “கொடைக்கானல் முழுசும் கரண்ட் வருவதற்கு எவ்வளவுநாள் ஆகும்?” என்று கேட்டனர். அதற்கு அமைச்சர், “மாய மந்திரத்தால் எதையும் செய்துவிட முடியாது. மின் இணைப்பு கிடைக்கத்தான் வேலைகள் சீரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது. கரண்ட் இல்லாத பகுதிகளில்கூட ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இருந்தாலும் விரைவில் எல்லா பகுதிக்கும் கரண்ட் வந்துவிடும்” என்றார்.

Leave a Response