பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய கேரள எஸ்பி திடீர் இடமாற்றம்..!

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த கேரள எஸ்பி யதீஷ் சந்திராவை திடீரென இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு.

சபரிமலை பகுதியில் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கிவிட்டதால் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அந்த மாநில போலீஸார் விதித்துள்ளனர். பம்பையில் வாகன நிறுத்த இடங்கள் கேரள மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் நிலக்கல்லில் வாகனத்தை நிறுத்துமாறு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

அதுபோல் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசு பேருந்தில்தான் பம்பைக்கு செல்ல முடியும். அத்துடன் இரவு நேரத்தில் சன்னிதானத்திலும் பக்தர்கள் தங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி கட்டிக் கொண்டு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

இவர்களின் கார் நிலக்கல்லை அடைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாவட்ட எஸ்பி யதீஷ் சந்திரா , மத்திய அமைச்சருடன் வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார். அமைச்சரின் காரை தவிர மற்றவர்களின் வாகனங்கள் நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கூறினார். இதனால் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் எஸ்பி யதீஷ் சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னுடன் வந்தவர்களின் காரை அனுமதிக்காததால் பொன் ராதாகிருஷ்ணனும் நிலக்கல்லில் இருந்து அரசு பேருந்தில் பம்பை சென்றார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி யதீஷ் சந்திரா மீதும் கேரள அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக அரசு புகார் அளித்தது.

இதையடுத்து மாவட்ட எஸ் பி யதீஷ் சந்திராவை அவர் ஏற்கெனவே பணியாற்றி வந்த திருச்சூர் ஆணையராக இடமாற்றி கேரள அரசு உத்தரவிட்டது. திருச்சூர் எஸ்பியாக இருந்த புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமித்துள்ளது. யதீஷ் சந்திரா செய்தது சரியே என வாதிட்ட கேரள அரசு திடீரென எஸ்பியை இடமாற்றம் செய்தது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Leave a Response