24 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு ரிலீஸாகும் ரஜினி படம்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள “பேட்ட” படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.இந்த பொங்கல் தலைவர் பொங்கல், பேட்ட பொங்கல் என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு காலத்தில் ரஜினியின் படங்கள் பண்டிகைக்கு ரிலீஸாகும். ஆனால் சிறு படங்கள் மற்றும் பிற பெரிய நடிகர்களின் படங்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவதை தவிர்த்துவிட்டார் ரஜினி. இந்நிலையில் தான் பல ஆண்டுகள் கழித்து ரஜினி படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது.

கடைசியாக பண்டிகை காலத்தில் வெளியான ரஜினி படம் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு சந்திரமுகி, கமல் ஹாஸனின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜய்யின் சச்சின் ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் சந்திரமுகி தான் சூப்பர் ஹிட் படமானது. சந்திரமுகிக்கு பிறகு பண்டிகை காலங்களில் தனது படத்தை ரஜினி ரிலீஸ் செய்யவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப் போனது. 2.0 படம் வரும் 29ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. முன்னதாக கடந்த 1995ம் ஆண்டு பாட்ஷா படம் பொங்கலுக்கு ரிலீஸானது. ரஜினியின் கெரியரில் முக்கிய பங்கு வகித்த பாட்ஷாவை அடுத்து பேட்ட தான் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. பாட்ஷாவை போன்று பேட்ட படமும் ரஜினிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response