தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென்று பதவி விலகியுள்ளார்.

சமீபத்தில் ‘சர்கார்’ பட விவகாரத்தில் இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு முழு ஆதரவளித்து அவருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்திருந்ததால் இயக்குநர் கே.பாக்யராஜூக்கு திரைப்பட உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரும் பெயர் கிடைத்திருந்தது. இந்த நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ :

“மரியாதைக்குரிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான வணக்கம்.

போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நமது சங்கத்துக்குத் தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். நானும் சந்தோஷமா பொறுப்பு எடுத்துக்கிட்டு மனசாட்சியோட நேர்மையா செயல்படுறதா உறுதிமொழி எடுத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருந்தது.

திடீரென்று சர்கார் படம் சம்பந்தமா ஒரு புகார் சங்கத்துக்கு வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருக்கிறதா தெரிஞ்சதால அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் இருக்குற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியா நியாயமா அதை செயல்படுத்தவும் முடிந்தது.

ஆனால் அதில் நான் பல அசெகளகரியங்களை சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கியக் காரணமா நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காமல் நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.

சங்கத்தில் சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டியிருக்கு. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய, சங்கத்தோட பெயரையும், சங்க உறுப்பினர்களின் நலனையோ காப்பாற்ற முடியாதோன்னு தோணுது. அதைச் சரி செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன்.

அதுக்கு ஒரே வழி. நான் உட்பட போட்டியில்லாமல் பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா செய்துவிட்டு முறையா தேர்தல் நடத்தி ஜெயிச்சு மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். ஆனால் மற்றவர்களை நிர்ப்பந்திக்கும் உரிமை எனக்குக் கிடையாது.

சங்கம் இருக்குற நிலைமைல இப்போ தேர்தல் நடத்துறது வீண் செலவுன்னு நிறைய பேர் அபிப்ராயப்படலாம். ஆனால் சங்கமே வீணாப் போறதைவிட செலவு வீணாகுறதுல தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்குறவங்க ராஜினாமா செய்யலாம்.

அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா நான் அதுல மீண்டும் தலைவர் பதவில முறையா நின்னு மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு தொடர்ந்து கடமையோட செயல்படுவேன். எனக்கு நேர்ந்த அசெளகரியங்கள் என்ன.. ஒழுங்கீனங்கள் என்னங்கறதை.. சங்க நலன் நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பவில்லை.

அதோட முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததால வேற வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும், அது தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இப்படிக்கு

கே.பாக்யராஜ்..

என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Response