ராஜபக்சே பிரதமராகி இருப்பது இலங்கை தமிழர்களை அழிக்கத்தான் – தம்பிதுரை பரபரப்பு பேட்டி..!

இலங்கையில் வசிக்கும் தமிழர்களை முற்றிலும் அழிக்கவே ராஜபக்சே பிரதமராயிருக்கிறார் என்று மு. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீதிமன்றத் தீர்ப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்எல்ஏ கிடையாது. இவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் உறுப்பினராக இணைந்து பணியாற்ற விரும்பினால் வரவேற்போம். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். டிடிவி தினகரனை சேர்ப்பதா? வேண்டாமா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.

வருகிற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பற்றிய பேச்சு எழவில்லை. கடந்த, 2004க்கு பின், தேசிய கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி வைக்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. சமீபத்தில், மத்திய அரசின் விருந்தினர்களாக, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே வந்து சென்றனர்.

அதன்பின், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவர்கள் வந்தபோது, தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது, ராஜபக்சே பிரதமரானதற்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்திருப்பது வெறும் நாடகம். தமிழர்களை மீண்டும் அழிக்க, சதி நடக்கிறது. 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் இந்திய ராணுவத்தின் உதவியால்தான் வெற்றி பெற்றதாக ராஜபக்சே கூறியிருந்தார்.

அப்போது காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. தற்போது ராஜபக்சே பிரதமராகியிருப்பதால் உலகத் தமிழர்கள் கொதித்து போய் இருக்கின்றனர். இலங்கையில் வசிக்கும் தமிழர்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சதியாகத்தான் அவர் பிரதமராகிருப்பதாகக் கருதுகிறோம். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தேசிய கட்சிகளிடம் நம்பத்தகுந்த நிலைப்பாடு இல்லை இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

Leave a Response