கூத்துப்பட்டறை பிரபல கலைஞர் ந. முத்துசாமி காலமானார்..!

சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆம்ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது “கூத்துப்பட்டறை” என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. நடிகர்கள் விஷால், பசுபதி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இந்த கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தான்.

“கசடதபற”, “நடை” போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “ந. முத்துசாமி கட்டுரைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல், ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படமாக எடுக்கப்பட்ட போது அதில் இயக்குநர் ஸ்ரீதர்ராஜன் உடன் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்துள்ளார்.

சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக ந.முத்துசாமி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னையில் அவர் உயிரிழந்தார்.

Leave a Response