“இன்பமான இம்சை அரசன்” சிவகார்த்திகேயன் – சத்யராஜ் புகழாரம்!

Varuthapadatha Vaalibar Sangam Press Meet (2)

விண்ணைத்தாண்டி வருவாயா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் P.மதன் தயாரிப்பில், “ஒரு கல் ஒரு கண்ணாடி” இயக்குனர் ராஜேஷ்.M வசனத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் “வருத்தபடாத வாலிபர் சங்கம்”.

சிவகார்த்திகேயனுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். தெலுங்கில் வெற்றிபெற்ற “பஸ் ஸ்டாப்” படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் வெண்ணிலா சூரி, சௌந்தர் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

சத்யராஜ் பேசும்போது, “நான் மிகவும் ரசித்து செய்த கதாபாத்திரம். நாலு பேர் செய்யும் தொல்லையால் நாசமா போன ஒருவன் எப்படி திரும்பி வரான் என்பது தான் கதை. “இன்பமான இம்சை அரசன்” சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிகவும் ஜாலியான விஷயம். சூரி, சிவா ரெண்டு பேருடன் நடிக்கும்போது பயந்து கொண்டே நடித்தேன். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா வரலாற்றையே தெரிந்து வைத்திருக்கிறார்.

யூத் டீம் கூட நடிப்பது சந்தோசமான விஷயம். முன்பெல்லாம் வேறு மொழி நடிகைகள் தமிழ் படத்தில் நடிக்கும் போது நான் கிண்டல் செய்வேன். இப்போ நான் தெலுங்கு, ஹிந்தியில் நடிக்கும் போதுதான் கஷ்டம் தெரியுது, நாயகி திவ்யா சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.

நாயகன் சிவகார்த்திகேயன் பேசும்போது, “SMS பார்த்தபின் இயக்குனர் ராஜேஷ்-ன் காமெடி படங்களில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை. ஆனால் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி தான் வொர்க் அவுட் ஆகும் என்பதால் அது நிறைவேறவில்லை. ஆனால் இந்த படத்தின் மூலம் அவரின் வசனத்தில் நடிப்பதால் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.

இயக்குனர் சொன்ன சிவனாண்டி கதாபாத்திரத்தை யார் செய்தால் சிறப்பாக இருக்கும் என யோசித்தபோது மனதிற்கு வந்தவர் சத்யராஜ் சார். அவர் இப்போது நண்பன், சென்னை எக்ஸ்பிரஸ், மிர்ச்சி என தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஒத்துகொள்வாரா என சந்தேகத்திலேயே கேட்டோம். அவர் ஏற்று கொண்டது மிகவும் மகிழ்ச்சி. சூரி அண்ணனோடு சேர்ந்து நடிக்கும் போது வசனங்களை புதுசா சேர்த்து பேசிப் பார்ப்போம். இயக்குனரும் அவற்றை ஏற்றுக்கொண்டு முழு சுதந்திரம் கொடுத்தார். நாயகிக்கு தமிழ் தெரியாததால் தெலுங்கு தெரிந்த இணை இயக்குனர் தளபதி தவிர மொத்த யூனிட்டும் நாயகியுடன் பேச முடியாமல் தவித்தோம். பாலசுப்ரமணியெம் என்னை அழகா காட்டியிருக்கிறார். அவருக்கும் நன்றி. இமான் இசையில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன” என்றார்.

இயக்குனர் பொன்ராம் பேசும்போது, “வின்னர் படத்தில் வரும் ஒரு போர்ஷன் காமெடியை எடுத்துக்கொண்டு, திரைக்கதை எழுதி மிகவும் ஜாலியாக வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை எடுத்துள்ளோம். இந்த படம் தொடங்க முக்கிய காரணம் நண்பர் ராஜேஷ் தான். எனக்காக வசனம் எழுதி கொடுத்து, ஆர்டிஸ்ட் பேசி ஆரம்பித்து வைத்தார்.

இந்த படத்தில் பிந்து மாதவி ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். குடும்பத்தோடு பார்க்க ஏதுவாக ஆபாச மற்றும் குடிக்கும் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து உள்ளோம். இந்த படத்தில் வருத்தபடாத வாலிபர் சங்கம் முன்னாள் தலைவர் வடிவேலுவை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றார்.