சண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இப்படம் வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது.

சண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என நடிகர் ராஜ்கிரண் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்கிரண், படத்தை பற்றி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

“சண்டக்கோழி முதல் பாகத்தைவிட 2வது பாகத்துக்கு இயக்குனர் லிங்குசாமி உள்பட அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். ஏனென்றால் இப்படம் முழுவதுமே திருவிழாவில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே ஒரு கிராமத்து திருவிழா எப்படி இருக்குமோ அப்படி செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் நூறு பேர் முதல் ஆயிரம் பேர் வரை இருப்பார்கள்.

லிங்குசாமி இந்த படத்தை தவம் போல் எடுத்திருக்கிறார். அதேபோல நடிகர் விஷால், ஒரு தயாரிப்பாளராக பணத்தை பார்க்காமல் நிறைய ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இவர்கள் இருவரின் தவத்துக்கும் மக்கள் வரமளிக்க வேண்டும்.

வரலட்சுமி படத்தின் வில்லியல்ல. இந்த படத்தில் வில்லன், வில்லி என்று யாரும் இல்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் எதிராக இருக்கும். ஒரு பெண்ணின் உரிமைப் போராட்டம். பெண்மையின் வீரியம், அதை உருவகப்படுத்திய கதாபாத்திரம் தான் வரலட்சுமி.

படத்தை பார்த்து முடிக்கும் போது, வரலட்சுமியின் உரிமைப் போராட்டம் நியாயம் எனத் தோன்றும். அவர் மீது ஒரு பட்சாதாபம் வரும். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் வரலட்சுமி.

முதலில் அவரை பார்த்தபோது, எனக்கு பயமாக இருந்தது. என்னமா இது மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி வந்திருக்கீங்க எனக் கேட்டேன். இந்த கேரக்டர் கணவரைப் பறிகொடுத்த ஒரு பெண் கதாபாத்திரம். வீரமா இருக்க வேண்டாமா எனக் கேட்டேன்.

இயக்குனர் லிங்குசாமிக்கு இது அக்னி பரீட்சை காலம். சண்டக்கோழி முதல் பாகம் அடைந்த வெற்றி அசாத்தியமானது. ஆனால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடாது. நாம் நல்ல சரக்கை எடுத்து வைத்திருந்தாலும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டால், ஏமாற்றமடைய செய்துவிடும். எனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்”, எனக் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Response