உலகின் எல்லா அம்மாக்களுக்குமான ஒரு படம் கங்காரூ!

Kangaroo

மணிவண்ணன் இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ படத்தினைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் கங்காரு. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கொடைக்கானலில் தொடங்கியது.

இந்தப் படத்திற்காக கொடைக்கானலில் அப்ஸர்வேட் என்னும் இடத்தில் ஒரு பிரமாண்டமான ஒரு அரங்கம் அமைத்திருக்கிறார் தோட்டாதரணி. தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டாதரணி. மிகவும் சவாலான மற்றும் பிரமாண்டமான அரங்குகளை அமைப்பதில் வல்லவர். இயக்குனர் ஷங்கரின் படங்களில் தோட்டாதரணியின் பிரமாண்டமான அரங்குகள் ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும்.

இதைப் பற்றி இயக்குனர் சாமி கூறும் போது, “தோட்டாதரணி சார் கொடைக்கானலின் உச்சியில் இருக்கும் அப்ஸர்வேட் பகுதியில்  பிரமாண்டமான தெரு ஒன்றை  உருவாக்கியுள்ளார். முழு கொடைக்கானலே தெரியும் அளவிற்கு அந்த தெரு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கொடைக்கானலில் இப்படியொரு வடிவமைப்பு நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

படத்திற்கு இந்த தெரு மிக முக்கியமாகும் என்பதால் மேடு பள்ளங்களுள்ள மலைப்பிரதேசத்தில் வெகு சிரத்தையெடுத்து அமைத்துள்ளார் தோட்டாதரணி. அந்த தெருவில் இருந்து பார்த்தால் கொடைக்கானலில் உள்ள அனைத்து முக்கியமான இடங்களையும் பார்த்து மகிழலாம். அதுவுமில்லாமல் மற்றொரு சிறப்பாக, 2 நிமிடம் ஓடும் கங்காரு படத்தின் டைட்டில் காட்சி முழுவதும் தோட்டாதரணியால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளின் மாதிரிகளால் படமாக்கவுள்ளோம். டைட்டில் காட்சியே ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்.

குடும்பத்தோட உக்கார்ந்து  பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக் கூடாதான்னு கேட்டாங்க. இதோ தமிழ்நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு  மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும்,  என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த கங்காரு. தாய்ப்பாசத்துக்கு உட்சபட்ச உதாரணம் கங்காரு” என்கிறார் உயிர், சிந்து சமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருக்கும் சாமி.

இந்தப் படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுனா, நாயகிகள் வர்ஷா, பிரியங்கா ஆகியோருடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். தனது உதவியாளர் எஸ்.டி.சாயின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாமி.

அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து ரசிகர்களை உலுப்பும் அளவிற்கு எழுதியிருக்கிறாராம். பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது. காமெராவை முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் கையாள, கலையை தோட்டாதரணி கவனிக்கிறார். நிர்வாகத் தயாரிப்பு; பி.பாஸ்கர்ராஜ். தயாரிப்பு நிர்வாகம்;  நமஸ்காரம் சரவணன் ,தயாரிப்பு சுரேஷ்காமாட்சி

கங்காரு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து 35 நாட்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.