ஆண் தேவதை – விமர்சனம்..!

கட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணமே பிரதானம் என்று ஒடுகிற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி அந்த ஓட்டத்தில் தங்களுடைய உண்மையான சந்தோஷத்தையும், நிம்மதியையும் தொலைக்கிறார்கள்? என்பதை எந்த பாசாங்கும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘ஆண் தேவதை’.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான சமுத்திரக்கனியும், ரம்யா பாண்டியனும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்.

இதனால் அவர்களுடைய இரண்டு குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது மிகவும் தவறு என்று உணர்ந்து கொள்ளும் சமுத்திரக்கனி மனைவி ரம்யா பாண்டியனை வேலையை விட்டு நிற்கச் சொல்கிறார்.

ஆனால் அவரோ என்னால் வேலையை விட முடியாது என்று மறுக்க, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக தன்னுடைய வேலையை விட்டு விட்டு குடும்பத்தைக் கவனிப்பது என்கிற முடிவெடுத்து ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ ஆகிறார் சமுத்திரக்கனி.

இன்னொரு புறம் ஐடி கம்பெனி வேலை பார்க்கும் ரம்யா பாண்டியன் தனது அலுவலக தோழியான சுஜா வருணியின் வாழ்க்கையை வியந்து பார்த்து, அவரைப் போலவே ஆடம்பர வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல மாறுகிறார்.

அவரின் இந்த நடவடிக்கைகள் சமுத்திரக்கனிக்கு பிடிக்காமல் போக, அதுவே கணவன், மனைவி இருவருக்குமிடையே பிரிவை ஏற்படுத்துகிறது. விளைவு சமுத்திரக்கனி தன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பணமே பிரதானம் என்று நினைத்து கணவனை வீட்டை விட்டு துரத்திய ரம்யா பாண்டியனின் கதி என்னவாகிறது? அவருடைய பகட்டு வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்ன? கணவன் – மனைவி பிரிவால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

‘ஆண் தேவதை’ என்கிற படத்தின் டைட்டிலுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவராக வருகிறார் சமுத்திரக்கனி. சமகால கணவன் – மனைவியின் வாழ்க்கை முறை இப்படியும் இருக்கிறது என்கிற உண்மை பொட்டில் அடித்தாற் போல் சொல்லுகிறது ‘ஹவுஸ் ஹஸ்பெண்ண்ட்’டாக மாறுகிற தருணங்கள்.

என்ன தான் மனைவி கோபமுகம் காட்டினாலும் தான் ஆண் என்கிற ஆதிக்கத் திமிரைக் காட்டாமல் அங்கேயும் பெண்ணுக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கிற காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளிக்கொள்கிறார்.

‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு அழகான நடுத்தரக் குடும்பத்துப் பெண் கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

மற்றவர்களைப் பார்த்து தானும் பகட்டு வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அதை நோக்கி மெல்ல மெல்ல குணம் மாறும் இக்காலப் பெண்களின் மன உணர்வை ஒவ்வொரு கட்டத்திலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது அவரது கேரக்டர்.

லட்சங்களில் சம்பாதிக்கிற திமிரில் பகட்டான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு லோன், கடன் என்று சிக்கலில் மாட்டிக்கொள்கிற நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ரம்யா பாண்டியனின் அலுவலக தோழியாக வரும் ரம்யா பாண்டியன்.

கணவன், மனைவிக்குள் நடக்கிற சண்டைகளில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளின் பாதிப்பை நுட்பமான நடிப்பால் வெளிப்படுத்துகிறார்கள் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டியனின் குழந்தைகளாக வரும் கவின், மோனிகா இருவரும்!

மனைவியை சந்தேகப்படும் இளவரசு, சமுத்திரக்கனிக்கு அடைக்கலம் கொடுக்கும் ராதாரவி என படத்தில் வருகிற மற்ற கதாபாத்திரங்களும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையின் வீரியத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

பணமே பிரதானம் என்று அதை நோக்கி ஓடுகிற நடுத்தரக் குடும்பத்தினருக்கும், வீடு, பங்களா என பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படுகிற இக்கால இளம்பெண்களுக்கும் ஒரு படிப்பினைப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தாமிரா. உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது? என்று தேடுகிற அத்தனை பேரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இந்த ஆண் தேவதை

 

Leave a Response