கருணாஸ் எல்லை மீறியதால் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார் – விஷால்..!

நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16ஆம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வீடியோ வைரலானது.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைக்கண்டு அஞ்சுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரை காக்கி சட்டையை கழட்டிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறும் சவால் விட்டார். கருணாசின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

நேற்று அதிகாலையில் சாலிகிராமம் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட கருணாஸ் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஷால் இன்று கருணாஸை வேலூர் சிறையில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய விஷால், நான் கட்சி தொடங்கவில்லை. இயக்கம் மட்டுமே தொடங்கியுள்ளேன். அதனால் இயக்கத்தின் கொடி படத்தில் வராது. அப்படி வந்தாலும் அது அகற்றப்படும் எனக் கூறினார்.

மேலும், இங்கு அனைவருக்கும் கருத்துரிமையும் பேச்சுரிமையும் உள்ளது. கருணாஸ் எல்லை மீறியதால்தான் கைது செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். நாளை (இன்று) வேலூர் சென்று கருணாஸை சந்திக்கலாம் என உள்ளேன் எனக் கூறினார்.

Leave a Response