அவசரமாக கூடுகிறது அமைச்சரவை -7 தமிழர் விடுதலையில் இன்று முக்கிய முடிவு..!

இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் உள்ளனர். சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் சில தினங்கள் முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநில அரசு தனக்கு உள்ள சட்ட அதிகாரத்தின்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து வேலூர் சிறையில் உள்ள ஏழு பேரும் நேற்று முன்தினம் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிதாக ஒரு கோரிக்கை மனுவை எழுதி அதை தங்களது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக அரசுக்கு கொடுத்தனுப்பினார். அந்த கடிதம் நேற்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று, விடுமுறை தினம் என்ற போதிலும், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இன்று, கூடுகிறது.

அமைச்சரவையின் அஜெண்டா என்ன என்பது குறித்து தெரியாவிட்டாலும், 7 தமிழர் விடுதலைதான் இதன் நோக்கம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் இதை உறுதி செய்தார்.

இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். இதன்மூலம் என்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

Leave a Response