ராணுவ வீரன்-நாய் – இவர்களது நட்பை வைத்து உருவாகும் ‘ஜாக்’..!

முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக் குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குநர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘புரூஸ்லீ’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு  நாயை  மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

‘புரூஸ்லீ’ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்துவிதமான படங்களையும் எடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்தக் கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

அசோக் செல்வன் எந்த வகை படமாக  இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டை பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 2019 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.

படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, “ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பேயே எழுதி விட்டேன்.

இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுது போக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன்தான். போர்க் காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்புதான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார்.

நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது…” என்றார்.

Leave a Response