ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சு.சாமி சர்ச்சை கோரிக்கை..!

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் நிலவரங்களை உற்று நோக்கி அது சம்பந்தமாக தன்னுடைய கருத்துகளை அடிக்கடி பதிவு செய்து பரபரப்பாக்கி வருபவர் சுப்பிரமணியசாமி. இவரது கருத்துக்கள் எப்போதுமே ஒரு சலசலப்பையும், அதிர்வையும் உண்டாக்குபவை. சில சமயம் மண்டையை பிய்த்து கொள்ளும் அளவுக்கு தன் கருத்துக்களை பதிவிட்டுவிடுவார்.

இவர் ராஜபக்சேமீது தீவிர பாசம் கொண்டவர். அடிக்கடி தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று அவரை சந்தித்துவிட்டு வருவார். அப்படி செல்லும்போது சில சமயங்களில் சிறைபிடிக்கப்பட்ட நம் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்து விட்டு வருவார்.

ஆனால் சிலகாலமாகவே, விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தி வருகிறார் சுப்பிரமணியசாமி. இப்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

காரணம், டெல்லியில், அடுத்த வாரம் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் ஒரு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காகவே போன வாரம் சுப்பிரமணிய சாமி இலங்கை சென்று ராஜபக்சவை நேரில் சந்தித்து இந்த விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவுக்கு, மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ சுப்பிரமணிய சாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த கருத்துக்கு இந்தியா மட்டுமில்லை.உலகம் முழுவதிலிருந்து வழக்கம்போல் கண்டனங்கள் குவியத் தொடங்கிவிட்டன!

Leave a Response