மே 17 திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு: ஜாமீனில் வரவிடாமல் தடுக்கும் காவல்துறை..!

திருமுருகன் காந்தி வெளிவர முடியாத அளவு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா மனித உரிமை சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் பேசியதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கின் கீழ் அவரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் புதிதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டத்தின் கீழ், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திருமுருகன் காந்தி பேசும் போது, பாலஸ்தீனத்தில் நடந்த போராட்டம் போல் இங்கும் விரைவில் நடக்கும் எனப் பேசியதாக அவர் மீது சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) 13 (1) (b) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி மீது இதுவரை குண்டர் சட்டம், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வந்த போலீசார் தற்போது ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response