பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

“ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களுக்கு ஆதரவாக எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கு விசாரணை ஆணையத்திற்கு உள்ளே செல்கிறது இது அநீதி ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.

அண்மையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு வழக்கறிஞர், ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது.

இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்திருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்தால் மோசமான முன்னுதாரணமாகிவிடும். அதே போல, ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்திருக்கிறார்கள் என்று வாதிட்டார்.

இந்நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response