மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்..!

திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரை மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அதன்பின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மெரினா விவகாரம் குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். அதில், மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம். அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அதுகுறித்து இனியும் பேச வேண்டாம்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி அடையும். நாங்கள் இப்போதே தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். யார் வேட்பாளர் என்று விரைவில் அறிவிப்போம்.

வேட்பாளர் பற்றி அதிமுக உயர்மட்ட குழு கூடி முடிவு செய்யும். தினகரன் வாக்காளர் பட்டியலை வைத்து முறைகேடு செய்கிறார். அவர் அதை வைத்து உறுப்பினர்கள் சேர்த்து வருகிறார், என்று கூறியுள்ளார்.

Leave a Response