திமுகவை ஒழிக்க மத்திய அரசு திட்டம் குற்றச்சாட்டை முன்வைக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்..!

திமுகவில் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சென்னையில் நடைபெறும் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் இன்று, மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது: அண்ணா மறைந்த போது, அண்ணாவிற்கு பிறகு திமுக இருக்காது என ஏகடியம் பேசினர். ஆனால் கருணாநிதி இந்த கட்சியை கட்டுக்கோப்பாக வளர்த்து, 1971ம் ஆண்டு தேர்தலில் 184 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெறச் செய்தார். திமுக அழிக்க முடியாத இயக்கம் என கருணாநிதி நிரூபித்தார்.

கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் சாதிப்பாரா என தலையங்கம் எழுதுகிறார்கள்.நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா வகுத்து தந்த கொள்கைகளை இறுதிமூச்சு அடங்கும் வரை கருணாநிதி செயல்படுத்தினாரோ அதேபோல, அடுத்த தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். இந்த சாதனையை நாம் நிகழ்த்தியாக வேண்டும்.

இன்றைக்கு நாம் பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கி கொண்டுள்ளோம். மத்திய அரசு ஒருபக்கம் நம்மை ஒழிப்பதற்கும், நமது இயக்கத்தை பிளப்பதற்கும் திட்டம் தீட்டிக் கொண்டுள்ளனர். நம்முடைய இன எதிரிகள். அவர்கள் ஒரு பக்கம் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என முயல்கிறார்கள். கருணாநிதி மிகவும் விரும்பிய மாநில சுயாட்சியை நாம் மீட்டெடுத்தாக வேண்டும்.

மாநில சுயாட்சி பறிபோகிறது. அதை மீட்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. எந்த தியாகத்தையும் நாம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.

Leave a Response